சமூக சீர்திருத்தம் மற்றும் மகளிர் மேம்பாட்டில் மிகச் சிறந்த சேவை புரிந்த மகளிருக்குத் தமிழ்நாடு அரசின் சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் மதிப்புமிக்க ஒளவையார் விருது 2026-ஆம் ஆண்டிற்குத் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. செ. சரவணன், இ.ஆ.ப., அவர்கள் அறிவித்துள்ளார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் நேரடியாக வழங்கப்படும் இந்த உயரிய விருதைப் பெறுபவருக்கு ரூ.1.50 இலட்சத்திற்கான காசோலை, பொன்னாடை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் ஆகியவை வழங்கப்படும். சமூக சீர்திருத்தம், மகளிர் மேம்பாடு, மதநல்லிணக்கம், மொழித்தொண்டு, கலை, அறிவியல், பண்பாடு, கலாச்சாரம், பத்திரிக்கை, நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில், குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பெண் குலத்திற்குப் பெருமை சேர்க்கும் வகையிலான சேவைகளைத் தொடர்ந்து செய்த மகளிரே இந்த விருதுக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள் ஆவர்.
விருதுக்கு விண்ணப்பிப்பவர்கள் தமிழ்நாட்டைப் பிறப்பிடமாகக் கொண்டவராகவும், 18 வயதிற்கு மேற்பட்டவராகவும் இருக்க வேண்டியது அவசியம். மேலும், பெண்களுக்கான இச்சேவைகளைத் தவிர்த்து, வேறு சமூக சேவைகள் மட்டுமே செய்திருந்தால் இந்த விருதுக்கு ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது எனத் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகுதியான நபர்கள் தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் (http://awards.tn.gov.in) விண்ணப்பத்தினைப் பதிவு செய்ய வேண்டும். இணையதளத்தில் பதிவு செய்த பிறகு, அதற்கான அனைத்து ஆவணங்களையும் கையேடாகத் தயார் செய்து, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அச்சு செய்யப்பட்டு, தலா 2 நகல்களை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் வளாகத்திலுள்ள மாவட்ட சமூகநல அலுவலகத்தில், 2025 டிசம்பர் 31-ஆம் தேதி மாலை 5.00 மணிக்குள் சமர்ப்பிக்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார். எனவே, இந்த மதிப்புமிக்க 2026-ஆம் ஆண்டுக்கான ஒளவையார் விருது பெறத் தகுதியுள்ள மகளிர்கள் உரிய காலத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















