திருவாரூர் ஆழித்தேர் திருவிழா சிறப்பாக நடத்த மரங்களை மொட்டையாக்கி வேண்டுதலை நிறைவேற்றும் அதிகாரிகள்

திருவாரூர் ஆழித்தேர் திருவிழாவை சிறப்பாக நடத்த வேண்டும் என்று வேண்டிக்கொண்டு, தேரோடும் நான்கு வீதிகளிலும் உள்ள மரங்களை மொட்டையாக்கி வேண்டுதலை நிறைவேற்றும் அதிகாரிகள் – லட்சக்கணக்கான பக்தர்கள் வெயிலில் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக பக்தர்கள் வேதனை

உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் ஆழித்தேர் திருவிழா வரும் 29ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக நடைபெற உள்ளது. இதற்காக தேர் கட்டுமான பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகிறது.

தேர் முன்னோட்ட பணிகள் தொடர்பாக கடந்த வாரம் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தலைமையில் ஆழித்தேர் திருவிழாவை சிறப்பாக நடத்துவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

அதில் தேர் திருவிழாவிற்கு வரும் பயணிகளுக்கு செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விரிவாக விளக்கப்பட்டது.

மேலும் அலங்கரிக்கப்படாத ஆழி தேரின் உயரம் 30 அடி என்பதால், தேரோடும் 4 வீதிகளிலும் 30 அடிக்கும் மேலே உள்ள மரங்களின் கிளைகளை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும் என்றும், 30 அடிக்கு கீழே உள்ள மரங்களை வெட்டக்கூடாது என்றும், கோடை காலம் தொடங்கிவிட்ட காரணத்தினால் தேர் இழுக்க வரும் பொதுமக்கள் மர நிழலில் இளைப்பாற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

ஆனால் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதற்கு மாறாக, தேரோடும் வீதிகளில் ஆளூயிர மரங்கள் கூட மொட்டையாக வெட்டி மரக்கிளைகள் கூட இல்லாமல் காட்சியளிக்கிறது. குறிப்பாக தெற்கு வீதி, மேலவீதி, வடக்கு வீதி, கீழ வீதி உள்ளிட்ட பகுதிகளில் தேரோட்டத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தாத, 10அடி, 15அடி, ஆள் உயர மரங்களைக் கூட முழுவதுமாக கிளைகளை வெட்டி மொட்டையாக மாற்றி வருகின்றனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் மரத்தை வெட்டும் ஊழியர்களிடம் 30 அடிக்கும் மேலே உள்ள மரங்களை தான் வெட்ட வேண்டும், ஏன் அதற்கு கீழே உள்ள மரங்களை வெட்டுகிறீர்கள்? என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு எங்களது அதிகாரிகள் இப்படித்தான் செய்ய சொன்னார்கள் என ஊழியர்கள் பதில் அளித்தவாறே மரங்களை மொட்டையாக்கும் பணியை தொடர்ந்து செய்தனர். இதனால் ஆழித்தேர் திருவிழாவை காண வரும் பக்தர்கள் வெயிலில் அவதிப்படுவார்கள் என்பது தெரிந்திருந்தும், அதிகாரிகள் இவ்வாறு செய்வதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

பத்து வருடங்களுக்கு முன்பு தேரோடும் வீதிகளில் 500க்கும் மேற்பட்ட மரங்கள் இருந்தன. ஆனால் தார் சாலையை சிமெண்ட் சாலையாக மாற்றும்போது 300க்கும் மேற்பட்ட மரங்களை வேரோடு வெட்டி சாய்த்தனர்.

தற்போது ஆழித்தேரில் மரங்கள் இடிபடாமல் இருப்பதற்காக கிளைகளை வெட்டுவதாக கூறிக்கொண்டு மரத்தை முழுமையாக வெட்டி வருவதால் ஆழித்தேரை காண வரும் லட்சக்கணக்கான மக்கள் கடும் வெயிலில் தவித்து, நிழலை தேடி அங்கும் இங்கும் அலையும் நிலை ஏற்படும் என பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Exit mobile version