பணி நிரந்தரம், உரிய ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்நாடு முழுவதும் செவிலியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் மூன்றாவது நாளாக நீடித்து வரும் நிலையில், செவிலியர்கள் தங்களது கோரிக்கைகளில் இருந்து பின்வாங்க மறுத்து உறுதியுடன் களத்தில் நிற்கின்றனர்.
நேற்று முன்தினம் நள்ளிரவில் கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் போராட்டம் நடத்திய செவிலியர்கள், அதனைத் தொடர்ந்து தற்போது கூடுவாஞ்சேரி பகுதியில் தங்கள் போராட்டத்தை தொடர்ந்துவருகின்றனர். போராட்டம் காரணமாக அந்தப் பகுதிகளில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.
இந்நிலையில், செவிலியர்கள் போராட்டம் தொடர்பாக தமிழக அரசு முக்கிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் செவிலியர்களின் காலிப் பணியிட விவரங்களை வரும் டிசம்பர் 22ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்காக மருத்துவக் கல்லூரி இயக்ககம், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை இயக்ககங்களுக்கு, மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநர் சித்ரா கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கை செவிலியர்களின் போராட்டத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
