சென்னை :
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து எழுந்த கேள்விகளுக்கு, நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல் ஹாசன் பதிலளித்துள்ளார்.
சென்னையில் நிருபர்களை சந்தித்த அவர் கூறியதாவது: “பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசை நலம் விசாரிக்க வந்திருந்தேன். ஆனால், அவரைச் சந்திப்பதற்கு முன்பே நல்ல செய்தி கிடைத்தது. இன்று மாலையே அவர் டிஸ்சார்ஜ் ஆகிறார். அவருடன் சில நிமிடங்கள் பேசினேன் நலமாக இருக்கிறார். அதேபோல், வைகோவும் ஓய்வு எடுத்து வருகிறார்; அவருக்கும் உடல்நலம் நலமாக உள்ளது என்று கூறினார்கள். இருவரும் நலமாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.”
பின்னர், கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு கமல் பதிலளிக்கையில், “கரூர் சம்பவம் ஒரு சோகமானது. ஆனால் அது குறித்து தினமும் பேசிக் கொண்டே இருப்பதால் அந்த சோகம் குறையாது. அந்த வகை நிகழ்வுகள் இனி நடக்காமல் தடுப்பது தான் நமது கடமை,” என தெரிவித்தார்.
அப்போது, “அந்த சம்பவம் அரசியல் நோக்கில் பேசப்படுகிறதா?” என ஒரு நிருபர் கேட்டார். அதற்கு கமல் ஹாசன், “எதில் வேண்டுமானாலும் அரசியல் செய்யலாம். இப்ப நான் பேசுறதைக் கூட வைத்து அரசியல் பண்ணலாம். ஆனால், பண்ணாமல் இருப்பது நம்ம இருவரின் கடமை,” என்று சிரிப்புடன் பதிலளித்தார்.