“எவ்வளவு விமர்சனங்கள் வந்தாலும் என் பணி மக்கள் பணி. அதை அறிந்து செயல்படுவேன்” என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற அறநிலையத்துறை சார்பான 32 ஜோடிகளுக்கான திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முதல்வர் ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறியதாவது :
“தி.மு.க. ஆட்சியில் அறநிலையத்துறை மூலம் இதுவரை 2,376 திருமணங்கள் நடைபெற்றுள்ளன. இதில் 150 திருமணங்களை நான் நேரில் நடத்தி வைத்துள்ளேன். மேலும், 3,127 கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெற, 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்கள் புனரமைக்க ரூ.425 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 7,000 ஏக்கருக்கும் அதிகமான கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன.”
தொடர்ந்து பேசிய அவர், “எல்லாரும் எல்லாம் என்ற மனப்பாங்குடன் தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது. கடந்த 4 ஆண்டுகளில் 2,326 இணையர்களுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது. உண்மையான பக்தர்கள், திராவிட மாடல் அரசை பாராட்டி வருகின்றனர். பக்தியின் பெயரால் பகல்வேஷம் போடுபவர்களால் நம்மை ஏற்றுக்கொள்ள முடியவில்லை” என்றார்.
“கேலி செய்யுங்கள்… மக்கள் பணியில் தடையில்லை”
விமர்சனங்களை எதுவும் பொருட்படுத்தாமல் தன்னுடைய பணியை தொடரப்போவதாகவும் முதல்வர் உறுதியளித்தார்.
“எங்களை கேலி செய்யுங்கள், விமர்சிக்குங்கள், கொச்சைப்படுத்துங்கள். ஆனால் நான் கவலைப்பட மாட்டேன். என் பணி மக்கள் பணி, அதை நிறைவேற்றுவதில் உறுதி இருக்கிறது” என்று அவர் வலியுறுத்தினார்.
நிகழ்ச்சியின் முடிவில், திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகள் பிறக்கும் குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயர் வைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.