விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே உள்ள வெள்ளக்கோட்டை பகுதியில் நாம் தமிழர் கட்சி தொழிற்சங்க பேரவை சார்பில் நெசவாளர் வாழ்வுரிமை பாதுகாப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு முன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50% வரி விதித்திருப்பதாக அவர் குறிப்பிட்டார். “தமிழ்நாட்டில் திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து அதிகளவு ஜவுளி பொருட்கள் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. நமது பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்காவின் வேளாண் பொருட்களை இறக்குமதி செய்ய மாட்டோம் என கூறியுள்ளார். ஜவுளி தொழில், கைத்தறி நெசவுத் தொழில் ஏற்கனவே நசிவடைந்துள்ளது. இப்போது இந்த வரி ஏற்றம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட கொங்கு மண்டலங்களில் ஆடை உற்பத்தியை பெரிய அளவில் பாதிக்கும். ஒவ்வொரு மாநிலத்திலும் பிரச்சனைகள் உள்ளன. நாடு பொருளாதார வீழ்ச்சியை சந்திக்கும் அபாயத்தில் உள்ளது. தற்சார்பு யாரும் கவனிக்கவில்லை; முழுவதும் வெளிநாட்டை சார்ந்து இருப்பது பேராபத்துக்கு வழிவகுக்கும்,” என்றார்.
மேலும், “ரஷ்யாவிடம் எரிபொருள் வாங்கக்கூடாது என்று அமெரிக்கா உத்தரவிடுகிறது. இது மிகவும் அபாயகரமான போக்கு; இதன் விளைவுகள் எங்கு கொண்டு சேர்க்கும் என்பது தெரியவில்லை. இதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்” என்றார்.
பெண் எம்பி செயின் பறிப்பு குறித்து
டெல்லியில் தமிழக பெண் எம்பியிடம் நடந்த செயின் பறிப்பு சம்பவம் குறித்து சீமான், “ராணுவ வீரர்களுக்கும் காவல்துறையினருக்கும் கூட பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகி விட்டது. புல்வாமா தாக்குதலில் பலியானவர்கள் அனைவரும் ராணுவ வீரர்களே. திருடனுக்கு தலைநகர், புறநகர் என்ற வித்தியாசமில்லை. நாட்டில் பாதுகாப்பு குறைவடைந்து, நவீன கண்காணிப்பு கருவிகள் பொருத்த வேண்டிய நிலை உள்ளது. இதுபோன்ற குற்றங்களை கடும் தண்டனைகளால் மட்டுமே தடுக்க முடியும். நாடு குற்ற நாடாக மாறி விட்டதை ஒப்புக்கொள்ள வேண்டிய சூழல் உள்ளது,” என்று தெரிவித்தார்.
நெல்லை கவின் கொலை வழக்கு தொடர்பாக
நெல்லையில் கவின் கொலை செய்யப்பட்ட விவகாரத்தைப் பற்றிய பாரிதாபங்கள் யூடியூப் சேனல் வெளியிட்ட வீடியோ குறித்து அவர், “அவர்கள் சரியாகவே சொன்னுள்ளனர். எதற்காகவும் கொலையை ஏற்க முடியாது. தமிழனுக்கு சாதி இல்லை; சாதி தமிழனுக்கு இல்லை. பிறப்பின் அடிப்படையில் உயர்வு, தாழ்வு பார்க்கக்கூடாது; செயலின் அடிப்படையில் தான் பார்க்க வேண்டும். காதலையும் அன்பையும் கொல்ல நினைப்பது தான் தாழ்ந்த சிந்தனை; அதுவே உண்மையான தாழ்ந்த ஜாதி. அன்பைத் தவிர உலகில் எதுவும் மிச்சமில்லை. சாதிக்காக கொலை செய்யாதே; ஜாதியை அழித்துவிடு. பாரிதாபங்கள் சொன்னதை கண்டிப்பது, சாதிய ஆதிக்கத்தின் வெளிப்பாடே. இந்த விவகாரத்தில் அரசு என்ன நடவடிக்கை எடுத்தது?” எனக் கேள்வி எழுப்பினார்.
‘கிங்டம்’ திரைப்பட விவகாரம்
‘கிங்டம்’ திரைப்படம் குறித்து சீமான், “தமிழர்களை இழிவுபடுத்தும் வகையில் படம் வெளியிடப்பட்டுள்ளது. பணம், இனத்தை விட மேலானதாகி விட்டதா? தமிழர்கள் இலங்கையில் போதைப் பொருள் கடத்தியதாக மட்டும் காட்டி, சிங்களர்களின் குற்றங்களைப் புறக்கணிப்பது எதற்காக? தமிழர்களை இழிவுபடுத்தி, தமிழர்களிடமே வியாபாரம் செய்வது ஏற்றுக்கொள்ள முடியாது. நான் நிகழ்ச்சிகளில் இருந்ததால் உடனே நடவடிக்கை எடுக்க முடியவில்லை. இன்னும் இரண்டு நாட்களில் அந்தப் படத்தை திரையிடுவதை நிறுத்தாவிட்டால், ஒரு தியேட்டரிலும் எந்தப் படமும் ஓடாது,” என எச்சரித்தார்.