வத்தலகுண்டு அறிவுத் திருக்கோயிலில் புத்தாண்டுச் சிறப்பு வழிபாடு இளைஞர்களுக்கு காயகல்பப் பயிற்சி அறிவிப்பு.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டுவில் அமைந்துள்ள அறிவுத் திருக்கோயிலில், 2026-ஆம் புத்தாண்டுப் பிறப்பை முன்னிட்டு உலக அமைதி வேண்டி சிறப்புக் கொடியேற்று விழா மற்றும் கூட்டு வழிபாடு எழுச்சியுடன் நடைபெற்றது. வத்தலகுண்டு அறிவுத் திருக்கோயில் தலைவரும் ஒருங்கிணைப்பாளருமான முத்துக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், செயலாளர் விஜயபாஸ்கர் மற்றும் பொருளாளர் மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்பித்தனர். விழாவின் ஒரு பகுதியாக, பேராசிரியர் ரமேஷ் “புத்தாண்டு புதிய சிந்தனை” என்ற தலைப்பில் உரையாற்றியதோடு, தற்காலச் சூழலில் மனித மனங்களை ஒருநிலைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். தொடர்ந்து பேராசிரியர் அருணாசலம் வாழ்வியல் விழுமியங்கள் குறித்து விரிவான கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் ஸ்டீபன், தமிழ்செல்வி, அன்னபூரணி, கமலம், அன்னபாக்கியம், கண்ணம்மாள் மற்றும் கணேஷ்பாபு ஆகியோர் கலந்துகொண்டு தங்களது வாழ்த்துச் செய்திகளை வழங்கினர். குறிப்பாக, தூய்மைப் பணியின் முக்கியத்துவம் குறித்தும், அது எவ்வாறு மனத் தூய்மையோடு தொடர்புடையது என்பது குறித்தும் சரவணன் விழிப்புணர்வு உரையாற்றினார். அறிவுத் திருக்கோவில் உறுப்பினர்களான முருகானந்தம், ஜோஸ்பின் ஆரோக்கிய மேரி, சீனிவாசன், சாந்தி, இளங்கோ, பிரேமா உள்ளிட்ட திரளான அன்பர்கள் இந்த கூட்டுப் பிரார்த்தனையில் பங்கேற்று உலக அமைதிக்காகத் தியானித்தனர்.

நிகழ்வின் இறுதியில் செய்தியாளர்களிடம் பேசிய தலைவர் முத்துக்குமார், இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் எதிர்கொள்ளும் மன அழுத்தத்தைக் குறைக்கவும், அவர்களின் மனவலிமையைப் பெருக்கவும் வத்தலகுண்டு அறிவுத் திருக்கோயில் சார்பில் இந்த ஆண்டு முழுவதும் சிறப்பு யோகா மற்றும் தியானப் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவித்தார். இதன் தொடக்கமாக, வரும் ஜனவரி 25-ஆம் தேதி உடல் மற்றும் மன நலனை மேம்படுத்தும் “பிரமாண்ட காயகல்பப் பயிற்சி” முகாம் நடைபெற உள்ளதாகவும், இதில் இப்பகுதி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு அவர் அழைப்பு விடுத்தார். பேராசிரியர் ராமநாதன் நன்றியுரை ஆற்ற, உலக நலன் வேண்டி நடைபெற்ற கூட்டுப் பிரார்த்தனையுடன் விழா  நிறைவுற்றது.

Exit mobile version