புத்தாண்டு விடுமுறை: வைகை அணையில் குவிந்த 5,000-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள்!

தேனி மாவட்டத்தின் மிக முக்கிய அடையாளமாகவும், சுற்றுலாப் பயணிகளின் விருப்பமான இடமாகவும் திகழும் வைகை அணை மற்றும் அதன் பூங்காக்களில், ஆங்கில புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் திரண்டனர். கொடைக்கானல் மற்றும் கேரளாவிற்குச் சுற்றுலா செல்லும் பயணிகள், தங்களது பயணத்தின் ஒரு பகுதியாக வைகை அணையின் இயற்கை எழிலை ரசிப்பதைக் காலங்காலமாக வழக்கமாகக் கொண்டுள்ளனர். அதன்படி, கிறிஸ்துமஸ் பண்டிகை முதல் புத்தாண்டு வரையிலான தொடர் விடுமுறை நாட்களில் வைகை அணையில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

வைகை அணையின் மொத்த நீர்மட்டம் 71 அடியாக இருக்கும்போது, சுமார் 10 சதுர மைல் பரப்பளவில் நீர்த்தேக்கம் பரந்து விரிந்து கடல் போல் காட்சியளிக்கும். ஆனால், தற்போது அணையின் நீர்மட்டம் 52.40 அடியாகக் குறைந்துள்ளதால், நீர்த்தேக்கத்தின் பரப்பு சுருங்கியுள்ளது. இது ஒருபுறமிருக்க, அணையை ஒட்டியுள்ள பூங்காக்கள் முறையான பராமரிப்பின்றிப் பொலிவிழந்து காணப்படுவது, தொலைதூரத்திலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. இருப்பினும், அணை வளாகத்தில் தனியார் மூலம் அமைக்கப்பட்டுள்ள பல வகை ராட்டினங்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்களில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை உற்சாகமாக ஏறி விளையாடி மகிழ்ந்தனர்.

குறிப்பாக, வைகை அணையின் முகப்பு பகுதியில் வலது மற்றும் இடது கரைகளை இணைக்கும் தரைப்பாலத்தில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் மிக அதிகமாக இருந்தது. அங்கே நீர் வழிந்து ஓடும் அழகைப் படம் பிடிப்பதற்காக, பலரும் ஆபத்தை உணராமல் பாலத்தின் விளிம்புகளில் நின்று ‘செல்ஃபி’ எடுத்தும், அலைபேசிகளில் காணொளி எடுத்தும் சென்றனர். இத்தகைய பாதுகாப்பற்ற செயல்களைக் கட்டுப்படுத்தக் கூடுதல் கண்காணிப்பு தேவை எனச் சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர். வழக்கமான நாட்களில் சில நூறு பேர் மட்டுமே வரும் நிலையில், புத்தாண்டு தினமான நேற்று மட்டும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகை தந்ததாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால், பூங்காக்களைச் சீரமைத்து அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Exit mobile version