டெல்லி லால் கிலா மெட்ரோ நிலையம் அருகே நேற்று மாலை ஏற்பட்ட கார் குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இதன் போது, வெடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட கார் 7 மணி நேரம் மர்மமாக காணாமல் போனது உள்ளிட்ட பல புதிய தகவல்கள் வெளிச்சம் பார்த்துள்ளன.
விசாரணையில் தெரியவந்ததாவது, அந்த கார் ஹரியானா மாநிலத்திலிருந்து பதர்பூர் எல்லை வழியாக நேற்று காலை 8 மணியளவில் டெல்லிக்குள் நுழைந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. பின்னர் வடக்கு டெல்லியின் காஷ்மீர் கேட், தர்யாகஞ்ச், சுனேஹ்ரி மஸ்ஜித் மற்றும் செங்கோட்டை பகுதிகளில் அந்த வாகனம் சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது.
முக்கியமாக, மாலை 6.22 மணியளவில் செங்கோட்டை அருகே உள்ள சுங்கச்சாவடி வழியாக சென்றதாக வீடியோ சான்றுகள் உறுதிசெய்கின்றன. சுமார் அரைமணி நேரத்திற்குப் பிறகு, அதே வாகனம் லால் கிலா மெட்ரோ முன்பு வெடித்தது குறிப்பிடத்தக்கது.
கார் டிரைவர், செங்கோட்டை வருவதற்கு முன் டெல்லி பழைய ரயில் நிலையத்தில் உறவினர்களை இறக்கிவிட்டு, மாலை 3.40 மணிக்கு பார்க்கிங் பகுதியில் காரை நிறுத்தியதாகவும், அது மூன்று மணி நேரம் அங்கு நிறுத்தப்பட்டிருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. பின்னர் 6.45 மணியளவில் சுபாஷ் மார்க் சிக்னல் வழியாக அந்த கார் நகர்ந்தது கண்டறியப்பட்டுள்ளது.
பெரும் மக்கள் நடமாட்டம் காணப்படும் செங்கோட்டை மற்றும் சாந்தினி சவுக் போன்ற இடங்களில் வெடிப்பு நிகழ்ந்திருப்பதால், அதிகபட்ச உயிரிழப்பை நோக்கி திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே, அந்த கார் 2018 முதல் இதுவரை நான்கு பேரிடம் கைமாறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. 2014 மார்ச் 18-ஆம் தேதி ஹரியானாவில் வசித்த முகமது சல்மான் வாங்கிய அந்த கார், பின்னர் தேவேந்திரா, சோனு மற்றும் தாரிக் என நான்கு பேரிடம் மாற்றம் அடைந்துள்ளது. இவர்கள் யாரும் உரிமை மாற்ற பதிவு செய்யாதது குறிப்பிடத்தக்கது.
காரை இறுதியாகக் காஷ்மீரை சேர்ந்த தாரிக் என்பவர் வைத்திருந்ததாகவும், ஆனால் வெடிப்புக்கு முன் காரை இயக்கியவர் மருத்துவர் உமர் நபி என சந்தேகிக்கப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதை உறுதிப்படுத்துவதற்காக உமர் நபியின் குடும்பத்தினரின் டிஎன்ஏ மாதிரிகள் தற்போது பரிசோதிக்கப்படுகின்றன.
காலை 8 மணி முதல் மதியம் 3 மணி வரை அதாவது 7 மணி நேரம் அந்த கார் எங்கு சென்றது, யாரை சந்தித்தது என்பது குறித்து டெல்லி காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.


















