கிணத்துக்கடவில் புதிய பயணியர் நிழற்குடை: பூமி பூஜை செய்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார் பொள்ளாச்சி வி.ஜெயராமன்!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் வகையில், உள்கட்டமைப்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, கிணத்துக்கடவு மேற்கு ஒன்றியம் நல்லட்டிபாளையம் ஊராட்சி பட்டணம் கிராமத்தில் பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையான புதிய பயணியர் நிழற்குடை அமைக்கும் பணிக்குத் தற்போது விடிவு கிடைத்துள்ளது. பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து இதற்காகப் பிரத்யேகமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான பூமி பூஜை மற்றும் கட்டுமானப் பணிகள் இன்று கோலாகலமாகத் தொடங்கின.

முன்னாள் அமைச்சரும், பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினருமான வி.ஜெயராமன் இந்த நிகழ்விற்குத் தலைமை தாங்கி, பூமி பூஜையை நடத்தி வைத்துப் பணிகளைத் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், பட்டணம் கிராம மக்களின் போக்குவரத்து வசதியை மேம்படுத்தவும், மழை மற்றும் வெயில் காலங்களில் பயணிகள் சிரமமின்றி காத்திருக்கவும் இந்த நிழற்குடை நவீன வசதிகளுடன் அமைக்கப்படும் எனத் தெரிவித்தார். தொகுதி மக்களின் கோரிக்கைகளை முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்றுவதே தனது இலக்கு என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து, அதிமுக நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆர்., மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு, கிணத்துக்கடவு மேற்கு ஒன்றியம் தாமரைக்குளத்தில் பிரம்மாண்ட முப்பெரும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற பொள்ளாச்சி வி.ஜெயராமன், நூற்றுக்கணக்கான ஏழை எளிய பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இளைஞர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் பொருட்டு, உள்ளூர் விளையாட்டு வீரர்களுக்கு கிரிக்கெட் மட்டைகள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன. விழாவின் சிறப்பம்சமாகப் பொதுமக்கள் அனைவருக்கும் அறுசுவை அன்னதானமும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிகளுக்குக் கிணத்துக்கடவு மேற்கு ஒன்றியச் செயலாளர் பாப்பு (எ) திருஞானசம்பந்தம் முன்னிலை வகித்தார். முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினரும், ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளருமான தாமரை தென்னரசு மற்றும் ஆர்-கோல்ட் ரங்கசாமி ஆகியோர் வரவேற்புரை ஆற்றினர். இதில் அதிமுக முக்கிய நிர்வாகிகள், பல்வேறு அணிகளின் பொறுப்பாளர்கள், தோழமைக்கட்சிப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர். சட்டமன்ற உறுப்பினரின் இந்தத் துரித நடவடிக்கைக்குப் பட்டணம் மற்றும் தாமரைக்குளம் பகுதி மக்கள் தங்களது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டனர்.

Exit mobile version