தமிழக பாஜக அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு முக்கியமான பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பாஜகவில் ஐந்து குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுக்களை ஒருங்கிணைக்கும் மத்திய ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு அண்ணாமலைக்கு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, தேர்தல் தொடர்பான ஒருங்கிணைப்பைச் செய்வது அண்ணாமலையின் பொறுப்பாகும்.
முன்னதாக அதிமுக – பாஜக கூட்டணி மீண்டும் உருவானபோது, எடப்பாடி பழனிசாமி பல நிபந்தனைகளை முன்வைத்திருந்தார். அதில் அண்ணாமலையைத் தலைவர் பதவியிலிருந்து மாற்ற வேண்டும் என்பதும் ஒன்று. அதன் பின்னர் நயினார் நாகேந்திரன் புதிய மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
ஆனால் சமீபத்தில் அண்ணாமலை டிடிவி தினகரனை சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனம் பெற்றது. இதன் தொடர்ச்சியாகவே, தேசிய தலைமை அண்ணாமலைக்கு ஒருங்கிணைப்பாளர் பொறுப்பை வழங்கியுள்ளது என கூறப்படுகிறது.
இந்த நடவடிக்கை, அண்ணாமலையின் அரசியல் செல்வாக்கு மீண்டும் அதிகரித்திருப்பதற்கான சான்றாகக் கருதப்படுகிறது. அவரது ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அதே நேரத்தில், தற்போதைய தலைவர் நயினார் நாகேந்திரனின் நிலை குறித்தும் அரசியல் வட்டாரத்தில் கேள்விகள் எழுந்துள்ளன.
















