நேபாளத்தில் சமூக வலைதள தடையை எதிர்த்து வெடித்த போராட்டம் வன்முறையாக மாறியதை அடுத்து, அங்குள்ள இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
சமூக வலைதளங்களான யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவற்றுக்கு நேபாள அரசு தடை விதித்ததை தொடர்ந்து, ஆயிரக்கணக்கான இளைஞர்கள் சாலைகளில் களமிறங்கினர். போராட்டம் தீவிரமடைந்த நிலையில், போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 19 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவத்துக்குப் பிறகு, தடையை வாபஸ் பெறுவதாக நேபாள அரசு அறிவித்துள்ளது. எனினும், இந்த நடவடிக்கையை அந்நாட்டு எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
இந்த சூழ்நிலையில், இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு,
“நேபாளத்தில் நிலவும் சூழ்நிலையை கவனித்து வருகிறோம். பலர் உயிரிழந்தது வேதனையளிக்கிறது. பிரச்சினைக்கு அமைதியான தீர்வு காண வேண்டும். அங்குள்ள இந்தியர்கள் அனைவரும் உஷாராக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்” என தெரிவித்துள்ளது.
















