நேபாள அரசு வாட்ஸ்அப், ஃபேஸ்புக், X (ட்விட்டர்), யூடியூப், அமேசான், ஃபிளிப்கார்ட் உள்ளிட்ட 26 சமூக ஊடக தளங்களுக்கு அதிரடி தடையை விதித்துள்ளது. இந்த நடவடிக்கை அந்த நாட்டில் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் நேபாள அரசு, அங்கு பொதுமக்கள் பயன்பாட்டில் இருக்கும் அனைத்து சமூக ஊடக தளங்களும் அரசிடம் கட்டாயமாக பதிவு செய்யப்பட வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. பதிவு செய்ய ஒரு வார கால அவகாசமும் வழங்கப்பட்டது. ஆனால், பெரும்பாலான சமூக ஊடக நிறுவனங்கள் அந்த உத்தரவை ஏற்று பதிவு செய்யவில்லை. இதையடுத்து நேபாள அரசு திடீர் நடவடிக்கை எடுத்து, 26 தளங்களுக்கு தடை விதித்துள்ளது.
இதற்கிடையில், டிக் டாக், வைபர் போன்ற தளங்கள் அரசின் உத்தரவை ஏற்று தங்களது விவரங்களை பதிவு செய்துள்ளதால், அவற்றிற்கு மட்டும் தடை விதிக்கப்படவில்லை.
அரசின் இந்த நடவடிக்கை குறித்து நேபாள பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். பேச்சுரிமை மற்றும் கருத்து சுதந்திரத்திற்கு எதிரான அச்சுறுத்தலாக இது அமைகிறது என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும், சமூக ஊடகங்களை பயன்படுத்தி வந்த பொதுமக்கள், வர்த்தகத் தொடர்புடையவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்படுவதால், நேபாளத்தின் பொருளாதாரமும் பாதிக்கப்படும் என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்த திடீர் தடை நடவடிக்கை நேபாளத்தைத் தாண்டி பல்வேறு நாடுகளிலும் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.















