நவீன தொழில்நுட்ப வளர்ச்சியில் ஆன்லைன் மோசடிகள் புதுப்புது வடிவங்களில் அரங்கேறி வரும் நிலையில், குறிப்பாக ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ (Digital Arrest) மற்றும் போலி முதலீட்டுத் திட்டங்கள் குறித்துப் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என நெல்லை மாநகர காவல் ஆணையர் மணிவண்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சைபர் குற்றவாளிகள் பயன்படுத்தும் நுணுக்கமான ஏமாற்று வேலைகள் குறித்து விரிவாக விளக்கியுள்ளார்.
சமீபகாலமாக ‘FedEX’ கூரியர் நிறுவனம் மூலம் உங்கள் முகவரியிலிருந்து போதைப்பொருட்கள் அடங்கிய பார்சல் அனுப்பப்பட்டிருப்பதாகக் கூறி மர்ம நபர்கள் தொலைபேசியில் தொடர்பு கொள்கின்றனர். பின்னர், உங்கள் ஆதார் எண் மற்றும் வங்கிக் கணக்குகள் சட்டவிரோத பணப்பரிவர்த்தனைக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக மிரட்டுகின்றனர். தங்களை சிபிஐ (CBI) அல்லது போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் என அடையாளப்படுத்திக் கொள்ளும் இவர்கள், வீடியோ கால் மூலம் உங்களைக் கண்காணிப்பதாகவும், நீங்கள் ‘டிஜிட்டல் கைதில்’ இருப்பதாகவும் கூறி மனரீதியாக அச்சுறுத்துகின்றனர். இதிலிருந்து தப்பிக்கப் பெரும் தொகையைத் தங்களது வங்கிக் கணக்கிற்கு அனுப்புமாறு மிரட்டிப் பணத்தைப் பறிக்கின்றனர். இத்தகைய வீடியோ கால்களை நம்ப வேண்டாம் என்றும், சட்டத்தில் ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ என்ற நடைமுறையே இல்லை என்றும் கமிஷனர் தெளிவுபடுத்தியுள்ளார்.
மேலும், சமூக வலைதளங்களான ஃபேஸ்புக், டெலிகிராம், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் மூலம் விளம்பரம் செய்யப்படும் அதிக லாபம் தரும் முதலீட்டுத் திட்டங்கள் மற்றும் ‘பகுதி நேர வேலை’ (Part-time job) வாய்ப்புகள் குறித்துப் பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும். முன்பின் அறிமுகமில்லாத நபர்கள் தரும் ஆசை வார்த்தைகளை நம்பி உங்களது தனிப்பட்ட விவரங்கள் மற்றும் வங்கிக் கணக்கு எண்களைப் பகிர வேண்டாம். குறிப்பாக, மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை பெற்றுத் தருவதாகக் கூறி வரும் அழைப்புகள் குறித்தும், முன்பின் தெரியாதவர்களுடன் சுய புகைப்படங்களைப் பகிர்ந்து கொள்வது குறித்தும் மாணவர்கள் மற்றும் பெற்றோர் கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் மூலம் பணத்தை இழக்க நேரிட்டால், முதல் இரண்டு மணிநேரத்திற்குள் (Golden Hours) புகார் அளிப்பது பணத்தை மீட்பதற்கான வாய்ப்பை அதிகப்படுத்தும். எனவே, ஏமாற்றப்பட்டதை உணர்ந்தவுடன் உடனடியாக 1930 என்ற கட்டணமில்லா சைபர் க்ரைம் உதவி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளம் வாயிலாகவும், மாநகர சைபர் க்ரைம் காவல் நிலையத்தை நேரில் அணுகியும் புகார் அளிக்கலாம் என மாநகர காவல் ஆணையர் மணிவண்ணன் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

















