அந்தமான் தீவுகளின் கிழக்குக் கரையில் இயற்கை எரிவாயு வளம் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.
நாட்டின் எரிசக்தி தேவைக்காக பெரும்பாலும் இறக்குமதி செய்யப்படும் பெட்ரோலியப் பொருட்களுக்கு மாற்றாக, ஆழ்கடல் எண்ணெய் மற்றும் எரிவாயு தேடலுக்கு மத்திய அரசு முனைந்துள்ளது. இதன் பகுதியாக, ஓ.என்.ஜி.சி நிறுவனம் அந்தமான் கடற்பகுதியில் ஆழ்துளையிடும் பணிகளை மேற்கொண்டது.
அதில், அந்தமான் தீவுகளின் கிழக்குக் கரையிலிருந்து 17 கிலோமீட்டர் தொலைவில், 295 மீட்டர் ஆழத்தில் அமைந்துள்ள ஸ்ரீ விஜயபுரம் பகுதியில் உள்ள 2 ஆய்வுக் கிணற்றில் இயற்கை எரிவாயு இருப்பு கண்டறியப்பட்டது. 2,212 – 2,250 மீட்டர் ஆழத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், எரிவாயு இருப்பு உறுதி செய்யப்பட்டது.
அந்தக் கிணற்றில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் கப்பல் மூலம் காக்கிநாடாவுக்கு கொண்டு செல்லப்பட்டு பரிசோதிக்கப்பட்டன. அதில் 87 சதவீதம் மீத்தேன் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இக்கண்டுபிடிப்பைத் தொடர்ந்து, எரிவாயு களத்தின் அளவு மற்றும் வணிக ரீதியான சாத்தியங்கள் குறித்து விரிவான ஆய்வுகள் நடைபெறவுள்ளன. வடக்கே மியான்மர் முதல் தெற்கே இந்தோனேசியா வரையிலான கடற்பகுதியில் ஹைட்ரோகார்பன்கள் இருப்பதைப் போலவே, அந்தமான் படுகையிலும் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருப்பது முக்கியமான முன்னேற்றமாக கருதப்படுகிறது.
குடியரசு தினத்தில் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த ஆழ்கடல் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு, எதிர்காலத்தில் உலகளாவிய ஆழ்கடல் ஆய்வு நிறுவனங்களுடன் (Petrobras, BP India, Shell, ExxonMobil) இணைந்து மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு வித்திடும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்த இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு, நாட்டின் எரிசக்தி துறையில் ‘அம்ரித் கால்’ பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் எனவும் அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.