மகளிர் மற்றும் குழந்தைகள் நலனுக்கான தேசிய அளவிலான முக்கிய திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி வரும் செப்டம்பர் 17-ஆம் தேதி தொடங்கி வைக்க உள்ளார்.
இந்தத் திட்டத்தின் முக்கிய குறிக்கோள், நாட்டில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தரமான சுகாதார சேவைகளை மேம்படுத்தி, அவர்களுக்கு மேம்பட்ட சிகிச்சை மற்றும் சுகாதார விழிப்புணர்வு வழங்குவதாகும். மத்திய அரசு வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த முயற்சி ஒரே நேரத்தில் நாடு முழுவதும் செயல்படுத்தப்படுவதால், இது உலக அளவில் புதிய சாதனையாக இருக்கும்.
அரசு மற்றும் தனியார் சுகாதார நிறுவனங்கள் இணைந்து செயல்பட உள்ள இந்த திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள ஆயுஷ்மான் ஆரோக்யா மந்திர் மற்றும் பிற சுகாதார மையங்களில் மொத்தம் 75,000 சுகாதார முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இம்முகாம்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் உடல்நலத்திற்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்படவுள்ளது.
மேலும், நாட்டின் அனைத்து அங்கன்வாடிகளிலும் “ஊட்டச்சத்து மாதம்” கொண்டாடப்படும். இதில் தாய்-சேய் நலம், ஊட்டச்சத்துக் குறைபாடு தடுப்பு, சமச்சீர் உணவு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், குழந்தைகளுக்கான உடல்நல பரிசோதனைகள் மற்றும் வளர்ச்சி கண்காணிப்பு அமர்வுகள் இடம்பெறும்.
இந்த தேசிய திட்டம் “ஸ்வஸ்த் நாரி, சஷக்த் பரிவார் அபியான்” என்ற பெயரில் அறிமுகமாகிறது. கடந்த சில ஆண்டுகளில் மகப்பேறு இறப்பு விகிதம் MMR மற்றும் பச்சிளம் குழந்தை இறப்பு விகிதம் (NMR) குறிப்பிடத்தக்க அளவில் குறைந்திருப்பதை மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2030க்குள் MMR-ஐ 70-க்கும் கீழ், NMR-ஐ 12-க்கும் கீழ், மேலும் U5MR-ஐ 25-க்கும் கீழ் குறைப்பதே இந்தத் திட்டத்தின் இலக்குகளாகும்.
இத்திட்டம் குறித்து பேசிய மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா, “இந்த முயற்சி பிரதமரின் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான தொலைநோக்குப் பார்வையை பிரதிபலிக்கிறது. மக்கள் பங்கேற்பு இயக்கமாகும் இந்தத் திட்டத்தில் தனியார் மருத்துவமனைகள் மற்றும் சுகாதாரத் துறை இணைந்து செயல்பட வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.
