தேசிய சாலை பாதுகாப்பு மாதம் – தேனியில் விழிப்புணர்வு பேரணி | பள்ளி–கல்லூரி மாணவர்களுக்கும் தொடர்ச்சியான பயிற்சி அவசியம்: சமூக செயற்பாட்டாளர்கள் வலியுறுத்தல்.
தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு, தேனி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று தேனி நகரில் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தேனி புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கிய இந்த பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சினேக பிரியா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
சாலை விதிகளை கடைப்பிடித்து விபத்துகளைத் தவிர்க்க வேண்டும் என்ற நோக்கில் நடைபெற்ற இந்த பேரணியில், நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் இருசக்கர வாகனங்களில் பங்கேற்று, “பொதுமக்கள் தலைக்கவசம் அணிய வேண்டும்”, “வேகம் விவேகம் அல்ல” உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்றனர். இந்த இருசக்கர வாகன பேரணி தேனி புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கி மதுரை சாலை, பெரியகுளம் சாலை, அன்னஞ்சி விளக்கு வழியாக தேனி நகரின் முக்கிய பகுதிகளில் வலம் வந்து பொதுமக்களிடையே சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது.
இந்திய அளவில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சாலை விபத்துகள் நடைபெற்று, லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பதாக சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிடும் தரவுகள் தெரிவிக்கின்றன. மக்கள் அடர்த்தி, வாகனப் பெருக்கம் மற்றும் நெடுஞ்சாலை பயன்பாடு அதிகமுள்ள மாநிலமாக இருப்பதால், தமிழ்நாடு சாலை விபத்துகள் அதிகம் நடைபெறும் மாநிலங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள், மாவட்ட முக்கிய சாலைகள் மற்றும் ஊராட்சி சாலைகள் என விரிவான சாலை கட்டமைப்பு உள்ளது. தொழில் நகரங்கள், விவசாயப் பகுதிகள் மற்றும் சுற்றுலா தலங்களை இணைக்கும் இந்த சாலை வலையமைப்பு மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு துணைபுரிந்தாலும், அதே நேரத்தில் அதிக வேகம், போக்குவரத்து விதி மீறல்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் பயன்படுத்தாமை காரணமாக விபத்துகள் அதிகரித்து வருவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், பொதுமக்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள், இத்தகைய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஒரே நாளோடு முடிவடையக் கூடாது என வலியுறுத்தியுள்ளனர். குறிப்பாக பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பெற்றோர்களை இலக்காகக் கொண்டு, மாணவர்கள் மற்றும் குழந்தைகள் சிறு வயதிலிருந்தே போக்குவரத்து விதிகளை மதித்து கடைப்பிடிக்கும் பழக்கத்தை உருவாக்கும் வகையில், சாலை பாதுகாப்பு பயிற்சி வகுப்புகள் தொடர்ச்சியாக நடத்தப்பட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், அரசு மற்றும் சட்ட அமலாக்கத் துறைகள் இணைந்து, முக்கிய சாலைகள், பள்ளி–கல்லூரி சுற்றுவட்டாரங்கள், விபத்து அதிகம் நிகழும் பகுதிகள் ஆகிய இடங்களில் போதிய காவலர்களை பணியமர்த்தி, வாகனங்களின் இயக்கத்தை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் சமூக செயற்பாட்டாளர்கள் வலியுறுத்தினர். தலைக்கவசம், சீட் பெல்ட் பயன்பாடு, வேக கட்டுப்பாடு, மது அருந்தி வாகனம் ஓட்டுதல் தடுப்பு ஆகியவற்றில் கடுமையான கண்காணிப்பும், விதிமீறல்களுக்கு உடனடி நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டால் மட்டுமே விபத்துகளை கணிசமாக குறைக்க முடியும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு காவல்துறை சார்பில் தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தின்போது மட்டுமல்லாமல், ஆண்டு முழுவதும் தொடர்ச்சியான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மற்றும் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டால், சாலை விபத்துகளை குறைத்து பல உயிர்களை காக்க முடியும் என பொதுமக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
