அறிஞர் அண்ணா மிதிவண்டிப் போட்டியில் இரவல் சைக்கிளில் கலந்து கொண்டு, சிறப்பிடம் பிடித்த நரிக்குறவ மாணவிகள் 2 பேருக்கு சொந்த செலவில் 2 மிதிவண்டிகளை வாங்கித்தந்த பூம்புகார் எம்எல்ஏ:- நரிக்குறவ மாணவர்கள் வாங்கிக்குவித்த பதக்கங்களை காண்பித்து ஆசிரியர்கள் பெருமிதம்:- தலைகீழாக நடந்து சென்றும், பானைமேல் யோகா செய்தும், சிலம்பம் சுற்றி பிரம்மிக்க வைத்து அசத்திய மாணவர்கள்:-
மயிலாடுதுறை அருகே பல்லவராயன்பேட்டை கிராமத்தில் தங்கியுள்ள நரிக்குறவ சமுதாயத்தினர் பயன்பெறும் வகையில் அங்கு சுபாஷ்சந்திரபோஸ் உண்டு உறைவிடப் பள்ளி அமைக்கப்பட்டுள்ளது. இப்பள்ளியில் தங்கிப் பயிலும் மோனிகா, ஹெப்சிபா ஆகிய 2 மாணவிகள் மயிலாடுதுறையில் அண்மையில் நடைபெற்ற அறிஞர் அண்ணா மிதிவண்டிப் போட்டியில் இரவல் சைக்கிளுடன் கலந்துகொண்டு, 4 மற்றும் 5-ஆம் இடங்களைப் பிடித்து சாதனை படைத்தனர். சாதனை படைத்த மாணவிகளை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த், மாவட்ட திமுக செயலாளர் நிவேதா எம்.முருகன் எம்எல்ஏ ஆகியோர் பாராட்டினர். அப்போது, 2 மாணவிகளுக்கும் தனது சொந்த செலவில் மதிவண்டி வாங்கித்தருவதாக எம்எல்ஏ நிவேதா முருகன் உறுதியளித்திருந்தார்.
இந்நிலையில் இன்று அவர் நேரடியாக மாணவிகள் பயிலும் பள்ளிக்கே சென்று மாணவிகளிடம் புதிய மிதிவண்டிகளை வழங்கினார். அப்போது, அவரிடம் முதலமைச்சர் கோப்பை மற்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடத்தப்பட்ட மாவட்ட போட்டிகளில் நீச்சல், ஜிம்னாஸ்டிக், சிலம்பம், பாக்ஸிங், யோகாசனம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் இப்பள்ளியின் மாணவ-மாணவிகள் வென்றெடுத்த கோப்பை மற்றும் சான்றிதழ்களை ஆசிரியர்கள் காட்சிப்படுத்தினர். இதையடுத்து, எம்எல்ஏ மாணவ-மாணவிகளை அழைத்து பாராட்டி சால்வை அணிவித்து அவர்கள் பெற்ற பதக்கங்களை தன் கையால் அணிவித்து ஊக்கப்படுத்தினார்.
தொடர்ந்து மாணவ மாணவிகள் பானை மீது யோகாசனம் செய்தும், பல்டி அடித்தும், தலைகீழாக நடந்து சென்று ஜிம்னாஸ்டிக் செய்தும், சிலம்பம் சுழற்றியும் அசத்தினர்.
