நாங்கு நேரி இரட்டை கொலை: 8 பேர்சிக்கியும் ஓயாத உறவினர்கள் போராட்டம் – உயர்நீதிமன்றம் அதிரடி தலையீடு!

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே பெரும்புத்து கிராமத்தில் அரங்கேறிய கொடூர இரட்டை கொலை வழக்கு தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இவ்வழக்கில் கைதானவர்களின் எண்ணிக்கை தற்போது எட்டாக உயர்ந்துள்ளது. கடந்த மார்ச் 2-ஆம் தேதி, எவ்வித காரணமும் இன்றி ஒரு கும்பலால் சரமாரியாக வெட்டப்பட்டதில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளி திரிநாத் கட்டா மற்றும் பெரும்புத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஜான் ஆகிய இருவரும் ரத்த வெள்ளத்தில் துடிதுடிக்க உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக ஏற்கனவே 7 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த மஞ்சங்குளம் மகாராஜன் என்பவரைத் தனிப்படை போலீஸார் நேற்று அதிரடியாகக் கைது செய்தனர்.

கொலையாளிகள் அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தியும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய பாதுகாப்பு கோரியும் ஜானின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் இன்று 4-வது நாளாகத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். “குற்றவாளிகள் அனைவரும் பிடிபடும் வரை உடலை வாங்க மாட்டோம்” என உறுதிபடத் தெரிவித்துள்ள உறவினர்கள், உடலை வாங்க மறுத்துப் போராடி வருகின்றனர். அதேவேளையில், உயிரிழந்த ஒடிசா தொழிலாளி திரிநாத் கட்டாவின் உடல் ஏற்கனவே அடக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரம் தற்போது சட்ட ரீதியான திருப்பத்தை எட்டியுள்ளது.

உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் ஜோதி ராமன் அமர்வு முன்பாக வழக்கறிஞர் ஆயிரம் கே.செல்வகுமார் ஆஜராகி முறையீடு செய்தார். “எவ்வித தவறும் செய்யாத புலம்பெயர்ந்த தொழிலாளி மற்றும் மாற்றுத்திறனாளி படுகொலை செய்யப்பட்டுள்ளது மிகுந்த வேதனை அளிக்கிறது. நீதிமன்றம் தாமாக முன்வந்து (Suo Motu) இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்” என்று அவர் கோரிக்கை விடுத்தார். இதனைக் கேட்ட நீதிபதிகள், இந்தத் துயரச் சம்பவத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான தகவல்களைப் பெற்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க அரசு வழக்கறிஞருக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்தனர். நாங்குநேரி பகுதியில் பதற்றம் நிலவுவதால் கூடுதல் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Exit mobile version