கோவை: கோவை விமான நிலையம் பின்புறம் உள்ள பகுதியில், காரில் ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவியை மூன்று பேர் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று இரவு 11 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில், 19 வயது மாணவி தனது ஆண் நண்பருடன் காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது, போதையில் வந்த மூன்று இளைஞர்கள் கத்தியால் காரின் கண்ணாடியை உடைத்து இளைஞரை தாக்கியுள்ளனர். பின்னர் மாணவியை காரிலிருந்து இழுத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
தாக்குதலில் காயமடைந்த வினித் என்ற இளைஞர் காவல்துறைக்கு தகவல் அளித்ததைத் தொடர்ந்து, போலீசார் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டனர். பின்னர் நிர்வாண நிலையில் இருந்த மாணவி மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வினித் தற்போது கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள தனிப்படை அமைக்கப்பட்டுள்ள நிலையில், குற்றவாளிகள் மூவரையும் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த கொடூர சம்பவத்தை தொடர்ந்து, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாகக் கண்டித்துள்ளார். “பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஆட்சி இது. திமுக திராவிட மாடல் அல்ல, பாலியல் மாடல் ஆட்சி தான்,” என்று அவர் கூறியுள்ளார்.
மேலும், “பெண்கள் மீது குற்றங்கள் அதிகரித்துள்ளன. கோவை போதைப்பொருள் கும்பல்களின் இரண்டாவது தலைநகராக மாறியுள்ளது. இந்த ஆட்சியில் 18,200 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள், 6,000 கொலைகள், 31 லாக்கப் மரணங்கள் நடந்துள்ளன. இதுகுறித்து முதல்வர் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்,” என்றும் அவர் தெரிவித்தார்.
அதே நேரத்தில், மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசனும் இந்த சம்பவத்தை கண்டித்துள்ளார். “சர்வதேச விமான நிலையம் அருகே இப்படியான சம்பவம் நடந்தது அதிர்ச்சி அளிக்கிறது. திமுக அரசுக்கு கோவையின் மீது அக்கறை இல்லை. பெண்கள் தங்களை பாதுகாப்பதற்காக சுய பாதுகாப்புப் பயிற்சி, பெப்பர் ஸ்ப்ரே போன்றவற்றை வைத்திருக்க வேண்டும்,” எனவும் அவர் கூறினார்.
இதையடுத்து, இன்று மாலை கோவையில் பாஜக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

















