திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு சுப்பிரமணிய சிவா பேருந்து நிலையத்தில், அரசுப் பேருந்துகளில் “தமிழ்நாடு” என்ற பெயர் இடம்பெறாததைக் கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் இன்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த 2012-ஆம் ஆண்டு முதல், பேருந்துகளில் உள்ள போக்குவரத்து கழகப் பெயர்களைப் பொதுமக்கள் எளிதாகப் படிக்கும் வகையில் சுருக்கமாக மாற்றம் செய்யப்பட்ட நடைமுறை அமலில் உள்ளது. இந்நிலையில், அரசுப் பேருந்துகளில் மாநிலத்தின் பெயரான “தமிழ்நாடு” என்பது வெளிப்படையாகக் குறிப்பிடப்படவில்லை எனக் கூறி இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வத்தலக்குண்டு பேருந்து நிலையத்திலிருந்து அண்டை மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகளை வழிமறித்த போராட்டக்காரர்கள், தமிழக அரசுக்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சங்கிலி பாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்திற்கு, மாவட்டத் தலைவர் ராஜதுரை முன்னிலை வகித்தார். இதில் மாவட்டச் செயலாளர் ராமுருகன், இளைஞர் பாசறைப் பொறுப்பாளர் தமிழ்செல்வன், மாவட்டப் பொருளாளர் முத்துப்பாண்டி, குருதிக்கொடை பாசறை மாவட்டச் செயலாளர் ரஞ்சித்குமார் மற்றும் நிர்வாகிகள் செந்தில்முருகன், ராமகிருஷ்ணன், நடவரசி ராஜதுரை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அவர்கள் தங்கள் கைகளில் வைத்திருந்த “தமிழ்நாடு” என்ற வாசகம் அச்சிடப்பட்ட ஸ்டிக்கர்களை, வரிசையாக நின்றிருந்த அரசுப் பேருந்துகளின் முகப்பு மற்றும் பக்கவாட்டுப் பகுதிகளில் ஒட்டித் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வத்தலக்குண்டு காவல் சார்பு ஆய்வாளர் சேக் முகமது தலைமையிலான போலீசார், பேருந்துகளில் ஸ்டிக்கர் ஒட்டியவர்களைத் தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பேருந்து நிலையத்தின் இயல்பு நிலையைப் பாதிக்கும் வகையிலும், அனுமதியின்றிப் போராட்டத்தில் ஈடுபட்டது மற்றும் அரசுச் சொத்துக்களைச் சேதப்படுத்தும் வகையில் ஸ்டிக்கர் ஒட்டியது ஆகிய காரணங்களுக்காக, மாநில ஒருங்கிணைப்பாளர் சங்கிலி பாண்டியன் உட்படப் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். இந்தப் போராட்டத்தால் வத்தலக்குண்டு பேருந்து நிலையத்தில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் பதற்றமான சூழல் நிலவியது.

















