கோவை :
அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் கோவையில் நடைபெற்றது. இதில், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கோவையிலுள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தார்.
அறிமுகம் செய்யப்பட்ட வேட்பாளர்கள் :
கோவை தெற்கு – பேரறிவாளன்
கவுண்டம்பாளையம் – கலாமணி ஜெகநாதன்
சிங்காநல்லூர் – நேரு
வால்பாறை – உமாதேவி
மேட்டுப்பாளையம் – கோபாலகிருஷ்ணன்
தொண்டாமுத்தூர் – ரஜிப்பூர் நிஷா
இந்த நிகழ்ச்சியில் பேசும் போது, தவெக தலைவர் விஜயை கடுமையாக விமர்சித்த சீமான், “திரைத் துறையில் இருப்பதுபோல, அரசியலிலும் விஜய்க்கு இயக்குனர் தேவைப்படுகிறது. தமிழக வெற்றிக் கழகம் ஒரு தற்குறி மட்டுமே. ’நான் உச்சத்தை விட்டுவிட்டு வந்தேன்’ என்கிறார் விஜய். யார் வரச் சொன்னது? எதற்காக வருகிறார்?” என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், “என் அன்புச் சகோதரர் அஜித்தும், ரஜினிகாந்தும் தங்கள் புகழை வியாபாரம் செய்யவில்லை. எம்.ஜி.ஆர். எழுதி வைத்ததை மனப்பாடம் செய்து பேசினார். விஜயகாந்த் மனதிலிருந்து மக்களின் மொழியில் பேசியவர். ஆனால் விஜயால் அது சாத்தியமில்லை. பார்த்து எழுதும் மாணவன், படித்து எழுதும் மாணவன் – இதில் யார் சிறந்தவர் என மக்கள் தீர்மானிக்க வேண்டும்” என சீமான் சாடினார்.
தமிழ் மொழி மற்றும் பண்பாட்டை வலியுறுத்திய அவர், “நிலத்தை இழந்தால் பலத்தையும் இழக்க நேரிடும் என்பதை நினைவூட்டும் விதமாகவே கோவையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தமிழன் எப்போதும் கதைகளிலும், வரலாறிலும் உயர்ந்தவன். ஆனால், ஆங்கிலம் கற்றால் அறிவு, இந்தி கற்றால் வேலை கிடைக்கும் என்கிறார்கள். உண்மையில், எந்த மொழியாலும் அறிவு உருவாகாது; மனிதன் செய்யும் உழைப்பில்தான் உயர்வு இருக்கிறது. எந்த தொழிலும் இழிவல்ல என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
முன்னதாக கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “விஜயை விட அஜித்திற்கு அதிக கூட்டம் வரும். அஜித், ரஜினி, நயன்தாரா போன்றவர்கள் வந்தாலும் கூட்டம் திரளும். ஆனால் கூட்டத்தை வைத்து முடிவு செய்யக்கூடாது; கொள்கையை பார்க்க வேண்டும். கொள்கை இல்லாத கூட்டம் வீணாகி விடும்” என்று தெரிவித்தார்.