‘தவெக என் தம்பி கட்சி’ – விஜய்யை விமர்சித்தபின் மென்மை காட்டிய சீமான்

திருச்சி : திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் ஆகிய நான்கு கட்சிகளும் தன்னுடைய எதிரிகள் எனக் கூறிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தவெக (தமிழக வெற்றி கழகம்) தன்னுடைய “தம்பி கட்சி” என்று குறிப்பிட்டுள்ளார். கடந்த சில மாதங்களாக நடிகர் விஜயை கடுமையாக விமர்சித்து வந்த நிலையில், தேர்தல் நெருங்கும் சூழலில் சீமான் எடுத்துள்ள இந்த நிலைப்பாடு அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த சீமான், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் (SIR) தொடர்பாக கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். பீகாரைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் நவம்பர் 4ஆம் தேதி தொடங்கிய SIR பணிகள் டிசம்பர் 14ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதில் சுமார் 27 லட்சம் பேர் உயிரிழந்தோர் பட்டியலிலும், 3 லட்சம் பேர் இரட்டை வாக்காளர் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளதாகவும், மீதமுள்ள 66 லட்சம் பேர் இடம்பெயர்ந்தோர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் சீமான் கூறினார். “ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதை எப்படி திருத்தம் என்று சொல்ல முடியும்? குறுகிய காலத்தில் இவ்வளவு வாக்காளர்களை மீண்டும் பட்டியலில் சேர்ப்பது சாத்தியமா?” என கேள்வி எழுப்பினார்.

மேலும், “மக்களின் அடிப்படை உரிமையான வாக்குரிமையே கேள்விக்குறியாகியுள்ளது. வாக்காளர்கள் ஆட்சியாளர்களைத் தேர்வு செய்யும் நிலை மாறி, ஆட்சியாளர்கள் வாக்காளர்களைத் தேர்வு செய்யும் காலம் வந்துவிட்டது. இது ஜனநாயகத்தின் மீது நடத்தப்படும் தாக்குதல்,” என்றும் சீமான் குற்றம்சாட்டினார்.

அதேபோல் நடிகர் விஜயின் அரசியல் கருத்துகள் குறித்தும் சீமான் விமர்சனம் முன்வைத்தார். “விஜய் இன்னும் முழுமையாக அரசியல் களத்திற்கே வரவில்லை. ஆனால் களத்தில் இருப்பவர்களை விமர்சிக்கிறார். திமுகவை ‘தீயசக்தி’ என்று கூறினால், அதற்கான காரணத்தையும் விளக்க வேண்டும்,” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “எனக்கு நான்கு எதிரிகள் உள்ளனர் – திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக. தவெக என் தம்பி கட்சி. அதனால் தட்டிக் கொடுப்பேன். ஆனால் தவெகவுடன் கூட்டணி அமைக்கும் வாய்ப்பு இல்லை. எங்களுக்குள் அடிப்படையான கொள்கை வேறுபாடுகள் இருக்கின்றன,” என்று சீமான் தெரிவித்தார்.

Exit mobile version