பா. சிவந்தி ஆதித்தனாரின் 90வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது நினைவில்லத்தில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், நடிகை விஜயலட்சுமியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவு குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், “வழக்கு வந்தபின் பேசுவோம். சமூகத்திற்கு தேவையற்ற கேள்விகளை எழுப்பாமல், ஆக்கபூர்வமான கேள்விகளை கேட்க வேண்டும்” என்று சாடினார்.
மத்திய அரசின் ஜிஎஸ்டி குறைப்பை விமர்சித்த அவர், “மக்களுக்கு சுமையாக இருக்கும் என்றே தெரியாமல் வரியை விதித்தவர்கள், இன்று அதை குறைத்து விட்டனர். இதனால் வளர்ச்சி ஏற்படுமா, வீழ்ச்சி ஏற்படுமா என்ற புரிதலே இல்லாமல் எப்படி ஆட்சி நடத்த முடியும்? மக்களை சுமையில் ஆழ்த்தியதற்காக பொதுமன்னிப்பு கேட்க வேண்டும். தங்க பிஸ்கட்டுக்கு 3% வரி விதித்து, குழந்தைகள் சாப்பிடும் பிஸ்கட்டுக்கு 18% வரி விதிப்பது எந்த தர்க்கம்?” என்று கேள்வி எழுப்பினார்.
தவெகவின் விமர்சனங்களை பற்றி கேட்டபோது, “அதை ரசித்து சிரித்துக்கொள்ள வேண்டும். கருத்தை கருத்தால் எதிர்க்கத் தெரியாததால் விமர்சனத்தில் தாங்க முடியாமல் வருகின்றனர்” என்று கூறினார்.
அதேபோல் விஜயை எதிர்த்து வலுவான கருத்துகள் வைக்கிறீர்கள், அவர் எதிராக போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு, “சிறுவர்கள் போல பேச வேண்டாம். விஜயுடன் எங்களுக்குள் கருத்து முரண்பாடு இருக்கிறது. ஆனால் அதை எதிர்த்து பேசுவது அக்கறையிலிருந்தே வருகிறது” என்று விளக்கம் அளித்தார்.
ஈழத்தமிழர் பிரச்சினையை விஜய் நாகையில் பேசியது தொடர்பாக சீமான், “என் தம்பி விஜய் திடீரென மீனவர்கள், ஈழத்தமிழர்கள் குறித்து பேசுவது, பிரதமர் மோடி தமிழில் திருக்குறள் சொல்வது போல் உள்ளது. உண்மையிலேயே உள்ளத்திலிருந்து வந்த கருத்தாக இருந்திருந்தால், அது முதல் மாநாட்டிலேயே வெளிப்பட்டிருக்கும். நானோ, மீனவர்களுக்காக 6 மாதங்கள் சிறையில் இருந்தவன்” என்று குறிப்பிட்டார்.