இந்தியாவில் பிறந்த முதல் சிவிங்கிப் புலி குட்டி ‘முகி’ நல்ல ஆரோக்கியத்துடன் வளர்ந்து வருவது வனத்துறையினருக்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு காலத்தில் இந்தியக் காடுகளில் பெருமளவில் வாழ்ந்த சிவிங்கிப் புலிகள், தொடர்ச்சியான வேட்டை காரணமாக முற்றிலும் அழிந்துவிட்டன. கடைசியாக 1950ஆம் ஆண்டு சத்தீஸ்கர் வனப்பகுதியில் இந்த இனத்தை கண்டதாக பதிவுகள் கூறுகின்றன. அதன்பிறகு சுமார் 70 ஆண்டுகளாக இந்தியாவில் சிவிங்கிப் புலி காணப்படவில்லை.
அழிந்த இனத்தை மீண்டும் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து, 2022ஆம் ஆண்டு ஆப்பிரிக்காவின் நமீபியா நாட்டிலிருந்து சிவிங்கிப் புலிகள் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டன. பிரதமர் நரேந்திர மோடி, மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் அவற்றை திறந்து விட்டார்.
ஆனால் வெப்பநிலை உள்ளிட்ட பல்வேறு சவால்கள் காரணமாக சில புலிகள் உயிரிழந்தன. இருந்தாலும் வனத்துறை விடாமுயற்சியுடன் பராமரிப்பு செய்து வந்தது. அதன் பலனாக, 2023 மார்ச் 29ஆம் தேதி குனோ பூங்காவில் ‘முகி’ என்ற குட்டி பிறந்தது. பிறக்கும் போதே மூன்று உடன்பிறப்புகளை இழந்து, தாயால் கைவிடப்பட்டாலும், வனத்துறையினரின் பராமரிப்பால் அது உயிர் பிழைத்து, இன்று மூன்றாவது ஆண்டை எட்டியுள்ளது.
தற்போது குனோ தேசிய பூங்காவில் நமீபியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட புலிகளும், அவை ஈன்ற குட்டிகளும் சேர்த்து மொத்தம் 25 சிவிங்கிப் புலிகள் உள்ளன.
வனத்துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது :
“முகி குட்டி சுறுசுறுப்பாக வளர்ந்து வருகிறது. மருத்துவர்கள் மற்றும் பூங்கா ஊழியர்கள் தினசரி கண்காணிப்பில் வைத்திருக்கின்றனர். பல சவால்களை கடந்து முகி இன்று ஆரோக்கியமாக இருப்பது, இந்த பாதுகாப்புத் திட்டம் வெற்றி பெற்றிருப்பதற்கான சான்றாகும்” என்றனர்.