மயிலாடுதுறையில் வெறிநாய் கடித்து 20-க்கு மேற்பட்டோர் காயம்: அரசினர் மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்தி சிகிச்சை பெற்றனர்:- நகராட்சி அதிகாரிகள் நேரில் ஆய்வு:-
மயிலாடுதுறை நகரின் மையப்பகுதியான பேருந்து நிலையம், கச்சேரி சாலை, கண்ணாரத்தெரு, அரசு மருத்துவமனை சாலை, கூறைநாடு உள்ளிட்ட பகுதிகளில் இன்று மாலை தெருநாய் ஒன்று வெறிபிடித்த நிலையில் சாலையில் சுற்றித் திரிந்துள்ளது. அந்த நாய் சாலையில் நடந்து சென்றவர்கள், இருசக்கர வாகனத்தில் சென்று 20-க்கு மேற்பட்டோரை துரத்திச் சென்று கடித்துள்ளது. இதில், காலில் பலத்த காயமடைந்த நிலையில் ரத்தம் சொட்டச்சொட்ட அரசு மருத்துவமனை நோக்கி பலர் படையெடுத்தனர். சிவக்குமார்(42), தனுஸ்ரீ(17), கற்பகம்(62) உள்ளிட்ட 20-க்கு மேற்பட்டோர் மருத்துவமனைக்கு வந்த நிலையில், அவர்களுக்கு நாய்க்கடி ஊசி செலுத்திய மருத்துவர்கள், இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, நகராட்சி நகர்நல அலுவலர் மருத்துவர் ஆடலரசி, நகராட்சி சுகாதார ஆய்வாளர் டேவிட் பாஸ்கர்ராஜ் ஆகியோர் மருத்துவமனைக்கு வந்து காயமடைந்தவர்களைச் சந்தித்து விபரங்களை கேட்டறிந்தனர். இதையடுத்து, வெறிபிடித்த நிலையில் சுற்றித்திரியும் நாயை பிடிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மயிலாடுதுறை நகரில் அதிகரித்துள்ள தெருநாய்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த அவற்றுக்கு கருத்தடை செய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
