திமுக அமைச்சரின் பேச்சு மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. வட இந்திய பெண்களை குறிக்கும் வகையில் கூறிய கருத்துகள் சமூக வலைதளங்களில் பெரும் விவாதமாகியுள்ளது.
சென்னை கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசுகையில் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, “தமிழக பெண்களின் நிலையும், வட இந்திய பெண்களின் நிலையும் வித்தியாசமாக உள்ளது. நூறாண்டுகளுக்கு முன் பெண்களை மதிப்பதற்கான சூழல் இல்லாவிட்டாலும், தமிழகத்தில் படிப்படியாக மாற்றம் ஏற்பட்டது. ஆனால் வட இந்தியாவில் பெண்கள் இன்னும் கணவர்களின் கட்டுப்பாட்டில் இருப்பது போல சூழல் நீடிக்கிறது. அங்கு ஒரு பெண்ணிடம் ‘உங்கள் கணவர் எங்கு வேலை செய்கிறார்?’ என்று கேட்கப்படும்; தமிழகத்தில் பெண்களிடம் ‘நீங்கள் எங்கு வேலை செய்கிறீர்கள்?’ என்று கேட்கலாம்” எனக் கூறினார்.
அவரது இந்த உரை, வட இந்திய பெண்கள் மீது குறைகூறும் விதமாக இருப்பதாக எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. பாஜக செய்தித் தொடர்பாளர் ஷஹ்சாத் பூனவாலா, “திமுக மீண்டும் ஒரு முறை தனது எல்லையை மீறியுள்ளது. வட மாநிலங்களை அவமானப்படுத்தும் பழக்கத்தை நிறுத்த வேண்டும்” எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதையடுத்து, சமூக வலைதளங்களில் பலரும் அமைச்சர் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.