கும்பகோணம் பிரதான சாலை காவேரி நகரில் அமைந்துள்ள சாரங்கபாணி நினைவு மேம்பாலத்தில் 3 மாதங்களுக்கு சீரமைப்புப் பணிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு பாலம் மூடப்பட்டு போக்குவரத்து பூம்புகார் கல்லணை சாலை மாப்படுகை ரயில்வே கேட் பகுதி வழியாக மாற்றி விடப்பட்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தினந்தோறும் 30 முறைகளுக்கு மேல் ரயில்வே கேட் மூடப்படுவதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர். இந்நிலையில் ரயில்வே மேம்பாலத்தில் அமைச்சர் மெய்யநாதன் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த், எம்எல்ஏக்கள் ராஜ்குமார், நிவேதா முருகன் ஆய்வு மேற்கொண்டனர். நடைபெற்று வரும் பணிகளை துரிதமாக முடிக்க அமைச்சர் தனது ஆய்வின்போது அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், மயிலாடுதுறை சாரங்கபாணி ரயில்வே மேம்பாலமானது பழுதடைந்ததைத் தொடர்ந்து, உடனடியாக இதனை புதுப்பிக்க ரூ.6 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகிறது. 1974-ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் முயற்சியால் கட்டப்பட்டு, 50 ஆண்டுகளைக் கடந்திருக்கும் இந்த ரயில்வே மேம்பாலத்தில் இதுவரை கோடிக்கணக்கான வாகனங்கள் சென்று வந்துள்ளது. எனவே, விபத்து ஏற்படாத வகையில் இப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த மராமத்து பணிகளை பொறுத்தவரை பாலத்தில் உள்ள தூண்களில் உள்ள பேரிங்குகள் புதியதாக மாற்றப்பட உள்ளது. இரண்டு தடுப்புச் சுவர்களும் புதியதாக அமைக்கப்பட உள்ளது. 45 நாள்களுக்குள் புதுப்பொலிவுடன் நமது மயிலாடுதுறை மாவட்டத்தில் இருக்கக்கூடிய மக்களுக்கு இந்த இரயில்வே மேம்பாலம் அவர்களின் பயன்பாட்டிற்கு வர உள்ளது. மக்களின் கோரிக்கைகளுக்குக்கேற்ப அக்.15-ஆம் தேதியிலிருந்து 20-ஆம் தேதி வரை ஒருவழி பாதையில் இருசக்கர வாகனங்கள், ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் செல்வதற்காக தற்காலிக பாதை அமைத்துத் தர ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வெளிமாநிலங்களிலிருந்து கொண்டு வரப்படும் நெல் கொள்முதலை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உரிய முறையில் விவசாயிகளுக்கு தேவையான நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தேவையான நெல்லினை பாதுகாக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.
