தமிழக சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக, திமுக தனது வலிமையை நிரூபிக்கும் வகையில் அடுத்தடுத்த பிரம்மாண்ட மாநாடுகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில், தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் வரும் ஜனவரி 19-ஆம் தேதி நடைபெறவுள்ள “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” டெல்டா மண்டல திமுக மகளிரணி மாநாடு குறித்து நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு இன்று முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
தஞ்சாவூரில் நடைபெற்ற மாநாடு தொடர்பான மண்டல அளவிலான ஆலோசனைக் கூட்டத்திற்குத் தலைமை வகித்த அமைச்சர் நேரு, பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது, “தஞ்சாவூர் அருகே செங்கிப்பட்டி பகுதியில் சுமார் 200 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த மாநாட்டிற்கான பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த மாநாட்டில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திமுக துணைப் பொதுச் செயலாளரும் மகளிரணி செயலாளருமான கனிமொழி கருணாநிதி உள்ளிட்ட முன்னணித் தலைவர்கள் பங்கேற்றுச் சிறப்பிக்க உள்ளனர்” என்று தெரிவித்தார்.
மேலும் மாநாட்டின் சிறப்பம்சங்கள் குறித்து அவர் விளக்குகையில், “டெல்டா மண்டலத்தைச் சேர்ந்த 12,500 வாக்குச்சாவடிகளிலிருந்து (Booth), ஒரு பூத்திற்கு 10 பெண்கள் வீதம் மொத்தம் 1.25 லட்சம் பெண்கள் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். அவர்கள் அனைவரும் கட்சி வழங்கியுள்ள பிரத்யேகச் சீருடையை அணிந்து அணிவகுத்து வருவார்கள். கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழக அரசு மகளிருக்காகச் செயல்படுத்திய கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, விடியல் பயணம் இலவசப் பேருந்து வசதி, புதுமைப் பெண் மற்றும் தமிழ்ப் புதல்வன் போன்ற பல்வேறு நலத்திட்டங்களை மக்களிடம் நேரடியாகக் கொண்டு சென்று வாக்குகளைச் சேகரிப்பதே இந்த மாநாட்டின் முதன்மை நோக்கம். இது வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வலுவான அச்சாரமாக அமையும்” என்றார்.
தொடர்ந்து கட்சியின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்துப் பேசிய அவர், திருவண்ணாமலை இளைஞரணி மாநாட்டைத் தொடர்ந்து, அடுத்த இளைஞரணி மாநாடு விருதுநகரில் ஜனவரி 22-ஆம் தேதி நடைபெறவுள்ளதாகவும், செங்கிப்பட்டி மகளிரணி மாநாட்டைத் தொடர்ந்து பிரம்மாண்ட பொது மாநாட்டை நடத்தத் தலைமை திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சி.வி. கணேசன், எஸ். ரகுபதி, சிவ.வீ. மெய்யநாதன், சா.சி. சிவசங்கர், கோவி. செழியன் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் ஆகியோர் பங்கேற்றனர். மேலும் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் திரளாகக் கலந்துகொண்டு மாநாட்டுப் பணிகளை ஒருங்கிணைப்பது குறித்து விவாதித்தனர். இம்மாநாடு டெல்டா மாவட்டங்களில் திமுகவின் தேர்தல் பிரச்சாரத்திற்கு ஒரு புதிய வேகத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
