தஞ்சை தமிழ் பல்கலைக் கழக இணையதளத்தில் இருந்து முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் பெயரும், புகைப்படமும் நீக்கப்பட்டிருப்பதற்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் 1981-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது தஞ்சை தமிழ் பல்கலைக் கழகத்தை நிறுவியதை சுட்டிக்காட்டியுள்ளார். அந்த பல்கலைக் கழக இணையதளத்தில் எம்.ஜி.ஆர். பெயரும், புகைப்படமும் நீக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சீப்பை ஒளித்துவைத்துவிட்டால் கல்யாணத்தை நிறுத்திவிடலாம் என நினைப்பதுபோல் படத்தை நீக்கிவிட்டால் எம்.ஜி.ஆரின் புகழை அழித்துவிடலாம் என நினைப்பது கடும் கண்டனத்துக்குரியது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் வன்மத்தை கைவிட்டு தஞ்சை தமிழ் பல்கலைக் கழக இணையதளத்தில் எம்.ஜி.ஆர். படத்தை உடனடியாக பதிவேற்றவும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
















