ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி பௌர்ணமியன்று சிவாலயங்களில் அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அவ்வகையில் நிகழாண்டு ஐப்பசி மாத பௌர்ணமியையொட்டி மயிலாடுதுறையில் பல்வேறு சிவாலயங்களில் அன்னாபிஷேகம் நடைபெற்றது. பார்வதி தேவி மயில் உருக்கொண்டு சிவனை வழிபட்ட தலமான மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் சுவாமிக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது. திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான இக்கோயிலில் மாயூரநாதருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, அன்னத்தால் அபிஷேகம் செய்யப்பட்டு அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.
இதேபோல் தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான வதான்யேஸ்வரர் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, அன்னத்தால் அலங்காரம் செய்யப்பட்டது. மேலும் காய்கறிகள் கொண்டு அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. ஏராளமான பக்தர்கள் அன்னாபிஷேக தரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை காவிரி ஆற்றின் கரையில் அமைந்துள்ள 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த படித்துறை காசி ஶ்ரீ விஸ்வநாதர் ஆலயத்திலும் அன்னத்தால் அபிஷேகம் செய்யப்பட்டு அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் வழிபாடு நடத்தினர். இதேபோல் பல்வேறு கோயில்களில் நடைபெற்ற அன்னாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர்.
