மயிலாடுதுறை 10-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது
மயிலாடுதுறை அருகே தன்னிடம் படிக்கும் 10-ஆம் வகுப்பு மாணவிக்கு போன் செய்தும், மெசேஜ் அனுப்பியும் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்து, மாணவியின் தற்கொலைக்கு காரணமாயிருந்த ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது:-
மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு காவல் சரக எல்லைக்குள்பட்ட கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் அதே ஊரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு விடுமுறையில் வீட்டில் இருந்து வந்துள்ளார். இவர் கடந்த மாதம் 27-ஆம் தேதி வீட்டின் பூஜை அறையில் உள்ளே நுழைந்து தாழிட்டுக்கொண்டு, உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்து கொண்டுள்ளார். சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் 28-ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து சிறுமியின் தாய் மணல்மேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் தனது மகள் படிக்கும் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வரும் தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா மனக்குண்ணம் கிராமத்தைச் சேர்ந்த கார்த்திகேயன்(42) என்பவர் தனது மகளுக்கு அடிக்கடி போன் செய்து தொந்தரவு கொடுத்து வந்ததாகவும், அதனை தான் கண்டித்த நிலையில் தற்கொலை செய்து கொண்டதாகவும் புகார் தெரிவித்திருந்தார். புகாரின்பேரில் சந்தேக மரணம் என போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் ஆசிரியர் கார்த்திகேயன் அடிக்கடி அச்சிறுமிக்கு போன் செய்தும், மெசேஜ் அனுப்பியும் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, தற்கொலைக்கு தூண்டுதல் மற்றும் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிந்த போலீசார், கார்த்திகேயனை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர். முன்னதாக இச்சம்பவம் தொடர்பாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரில் போலீசார் 194 பிஎன்எஸ் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த நிலையில் கிராமமக்கள் மாணவி படித்த பள்ளி ஆசிரியர் கார்த்திகேயன் மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததால் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக கூறி சாலைமறியல் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆசிரியர் கார்த்திகேயன் காதல் திருமணம் செய்து இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
