மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததும் சமயக்குரவர்களால் பாடல் பெற்றதுமான மாயூரநாதர் ஆலயம் அமைந்துள்ளது. .மயில் உருப்பெற்ற அம்பாள் தனது சாபம் நீங்க இறைவனை பூஜித்து சாபம் நீங்க பெற்றதாக ஆலயத்தின் தல வரலாறு தெரிவிக்கின்றது. இவ்வாலயத்தில் ஐப்பசி மாத காவிரி துலா உற்சவம் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 7ஆம்தேதி கொடியேற்றம் செய்யப்பட்டு ஐந்தாம் நாளள் திருவிழாவாக இரவு ஐதீக திருவிழாவான மயிலம்மன் பூஜை நடைபெற உள்ளது. இந்நிலையில் பூதம் பூதகி வாகனங்களில் பஞ்சமூர்த்திகள், சிவன் அம்பாள் மயிலுருவில் பல்லக்கில் எழுந்தருளி பன்னிரு திருமுறைகள், சமயக்குரவர்களுடன் வீதியுலாவாக காவிரி கரைக்கு எழுந்தருளி தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. சிவன், அம்பாள் மயில் உருவில் மயில் ஆடும் துறையான காவிரிகரை ஆலய வாயிலில் நடனமாடியது. முன்னதாக ஆலய வாயிலில் கோயில் யானை அபயாம்பிகை, தனது துதிக்கையை தூக்கி சில நிமிடங்கள் சுவாமி அம்பாளை வழிபட்டு நின்ற காட்சி பக்தர்களிடையே பெரும் பத்தி பரவசத்தை ஏற்படுத்தியது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று புனித நிராடி வழிபாடு மேற்கொண்டனர்.



















