வாஷிங்டன் :
அமெரிக்காவின் டென்னிசி மாநிலத்தில் உள்ள ஒரு ராணுவ வெடிமருந்து ஆலையில் ஏற்பட்ட பெரும் வெடிவிபத்து அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டென்னிசி மாநிலத்தின் கிராமப்புறப் பகுதியில் செயல்பட்டு வந்த அந்த ஆலையில் திடீரென வெடி ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த வெடிவிபத்து பல மைல் தூரத்திலிருந்தே உணரப்பட்டதாகவும், சத்தம் கேட்டதாகவும் அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.
விபத்தின் தாக்கத்தில் ஆலையின் ஒரு கட்டிடம் முற்றிலும் இடிந்து விழுந்தது. இதில் குறைந்தது 18 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் கடுமையாக காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மீட்புப்படையினர் சம்பவ இடத்தில் மீட்பு மற்றும் தேடுதல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
“பெரிய சத்தத்துடன் நிலம் குலுங்கியது… எங்கள் வீடு இடிந்து விழுந்தது போல உணர்ந்தோம்,” என அப்பகுதி மக்கள் அச்சத்துடன் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து டென்னிசி மாநில ஆளுநர் பில் லீ கவலை வெளியிட்டுள்ளார். “இந்த துயரமான விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மாநில அரசு தேவையான உதவிகளை வழங்கும்,” என அவர் தெரிவித்துள்ளார்.