மதுரை மாவட்டம் மேலூர் நகரில் விளையாட்டு ஆர்வத்தை ஊக்கப்படுத்தும் வகையில், மாநில அளவிலான இரண்டாம் ஆண்டு மாரத்தான் போட்டி மார்ச் 1-ம் தேதி அன்று அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. மேலூர் தாலுகா ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் பல்வேறு அமைப்புகள் இணைந்து நடத்திய இந்தப் போட்டியில், சிறுவர், சிறுமியர் மற்றும் 12 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் எனத் தனித்தனிப் பிரிவுகளின் கீழ் போட்டிகள் வகைப்படுத்தப்பட்டிருந்தன. அதிகாலை முதலே உற்சாகத்துடன் திரண்ட 1100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்றுத் தங்களது உடல் வலிமையையும், விடாமுயற்சியையும் வெளிப்படுத்தினர். இந்த நிகழ்வின் ஒரு சிறப்பம்சமாக, பெண்களுக்கு எனத் தனியாக ‘சாரி-வாக்கத்தான்’ (Saree Walkathon) போட்டி நடத்தப்பட்டது; இதில் ஏராளமான பெண்கள் தங்களின் பாரம்பரிய உடையில் பங்கேற்று ஆரோக்கிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
இந்த விளையாட்டுத் திருவிழாவினை பேங்க் ஆப் இந்தியா மேலூர் கிளை மேலாளர் சரவண ஸ்ரீ, மாவட்ட கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் முத்துராஜ், மேலூர் எஸ்.எம்.ஆர் மருத்துவமனை உரிமையாளர் ராமச்சந்திரன், தமிழ்நாடு அமெச்சூர் கபடி தேர்வு குழு தலைவர் மனோகரன், மேலூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முனியாண்டி மற்றும் ஜாஸ் பள்ளி பவுண்டர் வின்சென்ட் ஆகியோர் கொடியசைத்துத் துவக்கி வைத்தனர். மேலூர் தாலுகா ஸ்போர்ட்ஸ் கிளப் சேர்மன் பாலகிருஷ்ணன், செயலாளர் சாம், சாரா யோகா சென்டர் உஷா மற்றும் சேதுபதி ராஜா, நாகராஜ், பொன்மலை ஜெயம், சூர்யா, செல்வகுமார், தாய் டிவி ஜெயபிரகாஷ் ஆகியோர் போட்டிகளுக்கான முன்னேற்பாடுகளைச் சிறப்பாகச் செய்திருந்தனர்.
சிறப்பு விருந்தினர்களாக கிச்சா என்ற கிருஷ்ணன், அறம் பில்டர் ராம மூர்த்தி, விவி காஸ்டிங் விமல் ராஜ், லதா மஹால் சந்தோஷ் குமார், அங்காளம்மன் சுப்பிரமணியன் மற்றும் காம்ரேட் ஜிம் ஆனந்தன் ஆகியோர் கலந்துகொண்டு வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்குப் பதக்கங்களையும், சான்றிதழ்களையும் வழங்கிப் பாராட்டினர். மேலூர் பகுதியில் விளையாட்டுத் துறையை மேம்படுத்தவும், இளைஞர்களிடையே உடற்பயிற்சி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இத்தகைய மாநில அளவிலான போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

















