சென்னை:
சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நாய் மற்றும் பூனைகளை வீட்டில் வளர்க்கும் அனைவரும் லைசென்ஸ் பெறுவது கட்டாயம் என மாநகராட்சி அறிவித்துள்ளது.
மேயர் பிரியா தலைமையில் நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, செல்லப்பிராணிகளை வளர்ப்பவர்கள் நவம்பர் 24ஆம் தேதிக்குள் உரிமம் பெற வேண்டும். காலக்கெடு முடிந்த பின் உரிமம் பெறாதவர்களுக்கு, வீடு வீடாகச் சென்று அதிகாரிகள் ரூ.5,000 அபராதம் விதிக்க உள்ளனர்.
மேலும், நாய்களை பூங்கா அல்லது சாலைகள் போன்ற பொது இடங்களுக்கு அழைத்துச் செல்லும்போது கழுத்தில் பட்டை (leash) கட்டியிருக்க வேண்டும். இதை மீறினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும். அந்த அபராதத்தை அந்தந்த வார்டின் சுகாதார இன்ஸ்பெக்டர் வசூலிப்பார் என தீர்மானம் குறிப்பிடுகிறது.
அதோடு, நாய்கள் பொது இடங்களில் அசுத்தம் செய்தால், அதை அகற்றும் பொறுப்பு உரிமையாளர்களுக்கே என மாநகராட்சி எச்சரித்துள்ளது.
லைசென்ஸ் பெற விரும்புவோர் சென்னை மாநகராட்சி இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். செல்லப்பிராணியின் புகைப்படம் மற்றும் தடுப்பூசி சான்றிதழ் இணைத்து ரூ.50 கட்டணம் செலுத்தி உரிமம் பெற முடியும். மண்டல கால்நடை மருத்துவ அதிகாரி விண்ணப்பங்களை ஆய்வு செய்து உரிமம் வழங்குவார்.
தற்போது வரை 9,579 உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், சென்னையில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட நாய்கள் செல்லப்பிராணியாக வளர்க்கப்படுகின்றன என மதிப்பிடப்படுவதால், பெரும்பாலானோர் இன்னும் உரிமம் பெறவில்லை. இதனால் மாநகராட்சி மக்கள் அனைவரும் உடனடியாக லைசென்ஸ் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
நேற்றைய மாநகராட்சி கூட்டத்தில் இந்த தீர்மானம் உட்பட மொத்தம் 71 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 
			















