மதுரை, மே 16 : ஹைதராபாத்திலிருந்து மதுரை நோக்கி வந்த இண்டிகோ விமானம், மோசமான வானிலை காரணமாக மதுரை மாவட்டத்தில் வானத்தில் சுழன்று, ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தரையிறங்க முடியாமல் இருந்த சம்பவம் பயணிகள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வழக்கம்போல் இன்று மாலை 3 மணிக்கு ஹைதராபாத் விமான நிலையத்திலிருந்து புறப்பட வேண்டிய இண்டிகோ விமானம், 3:25 மணிக்கு புறப்பட்டது. மதுரை விமான நிலையத்தில் 4:30 மணியளவில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதே நேரத்தில் மதுரை மற்றும் அதனை சுற்றியுள்ள சிவகங்கை, விருதுநகர், உசிலம்பட்டி பகுதிகளில் கனமழையுடன் கூடிய மோசமான வானிலை நிலவியது.
இதனால் விமானம் நேரடியாக தரையிறங்க முடியாமல், குறைந்தது அரை மணி நேரத்திற்கு மேலாக வானத்தில் சுற்றிவந்தது. பயணிகள் பெரும் பதட்டத்துடன் இருந்த நிலையில், பிறகு வானிலை சீரானதைத் தொடர்ந்து 5:40 மணிக்கு விமானம் மதுரை விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது.
இந்தச் சூழ்நிலையால் பயணிகள் இடையே பெரும் அச்சம் ஏற்பட்டது. இருப்பினும் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.