மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ் பயணம் செய்த வெப்ப காற்று பலூன் எதிர்பாராதவிதமாக தீப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், அவருக்கு எந்த ஆபத்தும் இல்லாமல் உயிர் தப்பினார்.
மந்தசௌர் பகுதியில் உள்ள காந்திசாகர் வனப்பகுதியில் சுற்றுலா வளர்ச்சிக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வெப்ப காற்று பலூனில் பறக்க முதல்வர் மோகன் யாதவ் நேற்று ஏறினார். சில நிமிடங்களில் பலூன் புறப்படத் தயாரானபோது திடீரென தீப்பற்றியது. பலத்த காற்றினால் பலூன் தடுமாறியதால் நிலைமை மேலும் சிக்கலானது.
சமயோசிதமாக செயல்பட்ட பாதுகாவலர்கள் உடனடியாக முதல்வரை பாதுகாப்பாக கீழிறக்கினர். இச்சம்பவத்தில் யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை.
பின்னர் முதல்வர் மோகன் யாதவ் பேசியதாவது :
“இந்த காந்திசாகர் வனப்பகுதி சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் பல்வேறு அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது. சுற்றுலா தலமாக காந்திசாகரை மேலும் உயர்த்த மத்திய பிரதேச சுற்றுலா வளர்ச்சிக் கழகம் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது,” என தெரிவித்தார்.

















