தமிழக வானிலை துறையின் தகவலின்படி, இலங்கையின் தென்மேற்கு வங்கக்கடல் அருகே காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த சில மணி நேரங்களில் மேற்கு மற்றும் வடமேற்குத் திசைகளில் நகரும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் தாக்கத்தால் வடகிழக்குப் பருவமழை வலுப்பெற்று, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை தீவிரமாக காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று கடலோர மாவட்டங்களில் பல இடங்களில், உள்நாட்டு பகுதிகளின் சில இடங்களில், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னல் மற்றும் காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கனமழை வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம்,மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், காரைக்கால்
சென்னையின் வானிலை
நகரத்தில் வானம் முழுவதும் மேகமூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் இடி–மின்னலுடன் கூடிய மிதமான முதல் கனமழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் மிக கனமழையும் ஏற்படலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடலில் காற்றின் வீச்சு – மீனவர்களுக்கு எச்சரிக்கை
தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் ஆகிய இடங்களில் மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்தில் காற்று வீசும். இடையிடையே 55 கிமீ வரை சூறாவளிக் காற்று வீசக்கூடும். இதனால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை துறை அறிவுறுத்தியுள்ளது.



















