“அன்பே சிவம்… அருளே தைப்பூசம்”: அலங்காநல்லூரில் அரிசி மூட்டைகள் வழங்கல்!

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் தைப்பூசத் திருநாளை முன்னிட்டு, ஏழை எளியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் ‘மதுரையின் அட்சயப் பாத்திரம்’ அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராகத் தமிழகச் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் கலந்துகொண்டு, பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி மூட்டைகளை வழங்கித் தங்களது வாழ்வாதார உதவியைத் தொடங்கி வைத்தார். ஆன்மீகப் பெருவிழாவான தைப்பூசத்தின் சாராம்சமே பசித்தவர்களுக்கு உணவிடுவதுதான் என்பதை மெய்ப்பிக்கும் வகையில், இந்த அறப்பணி மிகச் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.

இந்நிகழ்வின்போது, அட்சயப் பாத்திரம் டிரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலு அவர்கள் உடனிருந்து ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொண்டார். மேலும், கவுன்சிலர் சுந்தர்ராஜன், அதிமுக ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் ஓய்வு பெற்ற காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்து, மாற்றுத்திறனாளிகளுக்குத் தேவையான உதவிகளைச் செய்தனர். விழாவில் பேசிய ஆர்.பி. உதயகுமார், தைப்பூச நன்னாளில இறை வழிபாட்டுடன் இணைந்து இத்தகைய சமூகப் பணிகளை மேற்கொள்வது மனதிற்கு மிகுந்த நிறைவைத் தருவதாகக் குறிப்பிட்டார். குறிப்பாக, பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளின் தேவைகளை உணர்ந்து அவர்களுக்கு அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்கிய அட்சயப் பாத்திரம் அறக்கட்டளையின் சேவையை அவர் வெகுவாகப் பாராட்டினார். இத்திருவிழா காலங்களில் மக்கள் சேவையே மகேசன் சேவை எனும் அடிப்படையில் திரளான பொதுமக்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் இம்மாபெரும் மனிதாபிமான நிகழ்வில் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

Exit mobile version