மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்து நெல் மூட்டைகளை ஏற்றிச் சென்ற லாரிகள், சுமைதூக்கும் பணியாளர்கள் பற்றாக்குரையால் சேமிப்புக் கிடங்குகளில் 5 நாட்களுக்கு மேலாக காத்திருக்கும் அவலம்:-
மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பு சம்பா, தாளடி பருவத்தில் 1,70,000 ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டு, முழு வீச்சில் அறுவடை நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் மூலம் 184 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, இதுவரை 50 சதவீதம் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை லாரிகள் மூலம் கொள்முதல் நிலையங்களில் இருந்து கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்த நிலையில் மூட்டைகளை கிடங்குகளில் இறக்குவதற்கு சுமைதூக்கும் தொழிலாளர்களின் பற்றாக்குறையால் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இதுவரை 1,20,000 மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ள நிலையில் 50,000 மெட்ரிக் டன் நெல் மட்டுமே கிடங்குகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 70,000 மெட்ரிக் டன் கொள்முதல் நிலையங்களில் உள்ளதாகவும், கொள்முதல் நிலையத்திலிருந்து லாரிகளில் ஏற்றப்பட்ட நெல் மூட்டைகளை கிடங்குகளில் இறக்குவதற்கு காலதாமதம் ஏற்பட்டதால் லாரி உரிமையாளர்கள் கடும் அவதி அடைவதாக மாவட்ட லாரி உரிமையாளர் சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். ஒரு நாளைக்கு 100 லாரிகளில் இருந்து மட்டுமே நெல் மூட்டைகள் கிடங்குகளில் இறக்கப்படுவதாகவும் இதனால் சித்தர்காடு சேமிப்பு கிடங்கு, பெருஞ்சேரி, மாணிக்கபங்கு, குணத்தலப்பாடி, தலைஞாயிறு சர்க்கரை ஆலை உள்ளிட்ட இடங்களில் 5 நாட்களாக நெல் மூட்டைகள் இறக்கப்படாமல் லாரிகள் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். போதிய சுமை தூக்கும் தொழிலாளர்களை அதிகாரிகள் நியமிக்கவில்லை என்று தெரிவித்துள்ள லாரி உரிமையாளர்கள் ஒரே டிரிப்புக்காக 5 நாட்கள் ஒரே இடத்தில் லாரிகள் முடங்கியுள்ளதால் டிரைவர்களின் தினசரி செலவுகள் போன்றவற்றால் லாரி உரிமையாளர்களுக்கு பெரும் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் உடனடியாக மூட்டைகளை ஒரே நாளில் இறக்கி தங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்று தெரிவித்தனர். இதுகுறித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் கூறுகையில் மாவட்டத்தில் 2,54,000 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போது வரை 1,20,057 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதில் 58,258 மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் கிடங்குகள், அரிசி ஆலைகளுக்கு இயக்கம் செய்யப்பட்டுள்ளது. மேலும் வெளி மண்டலங்களுக்கு ரயில் மூலம் இயக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுமை தூக்கும் தொழிலாளர்களின் பற்றாக்குறை சரி செய்யப்பட்டு முழுவீச்சில் இயக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.















