டெல்லி : வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான விவாதத்தை அவசரமாக நடத்தக்கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை இன்று செயலிழந்தது.
இரண்டு நாள் இடைவெளிக்குப் பின் இன்று காலை மக்களவை கூட்டத் தொடர் ஆரம்பமானது. கேள்வி நேரம் ஆரம்பித்ததும், எதிர்க்கட்சிகள் வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்த விவாதத்தை உடனே நடத்தக் கோரி முழக்கம் எழுப்பின. அவர்களது கோரிக்கைக்கு பதிலளித்த சபாநாயகர் ஓம் பிர்லா, இது குறித்து நேரமில்லா நேரத்தில் விவாதம் மேற்கொள்ளப்படும் என்று அறிவித்தார்.
ஆனால் சபாநாயகர் பதிலை எதிர்க்கட்சிகள் ஏற்க மறுத்ததால் அவையில் அமளி மோசமாகியது. இதனை கண்டித்த சபாநாயகர், “இந்த செயல்பாடு நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு நல்லதல்ல” என்று கடுமையாக எச்சரிக்கை தெரிவித்தார். அமளி தொடர்ந்ததால், அவை கூட்டம் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார்.