சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் உள்ள அரசு பள்ளியின் விளையாட்டு மைதானத்திற்கு பூட்டு விடப்பட்டதால், மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாமல் தவித்த பரிதாபம் ஏற்பட்டது.
இன்று (ஜூலை 3) காலை 9 மணி அளவில், திருப்புவனத்தைச் சேர்ந்த சொக்கலிங்கம் என்பவர், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு அருகே உள்ள விளையாட்டு மைதானம் மற்றும் வட்டார கல்வி மையத்திற்கு பூட்டு வைக்க பரபரப்பு ஏற்பட்டது.
வைகை ஆற்றின் வடகரையில் இயங்கி வரும் இந்த அரசு பள்ளியில் சுமார் 800 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். பள்ளிக்கு எதிரே ஐந்து ஏக்கர் பரப்பளவில் விளையாட்டு மைதானம் அமைந்துள்ளது. அந்த மைதானத்திற்குள் வட்டார கல்வி மையமும் செயல்பட்டு வருகிறது.
அந்த கல்வி மையத்தில் 13 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். திருப்புவனம் வட்டாரத்தில் உள்ள 43 அரசு பள்ளிகளுக்கான பாடப்புத்தகங்கள், சீருடைகள், கல்வி உபகரணங்கள் உள்ளிட்டவை இங்கு சேகரிக்கப்பட்டு வழங்கப்படுகின்றன. அதேபோல், ஆசிரியர்களுக்கான பயிற்சிகளும் இங்கு நடந்து வருகின்றன.
இந்நிலையில், இன்று காலை வழக்கம்போல் அலுவலகம் திறக்க முயன்றபோது வெளிப்புற கதவில் பூட்டு காணப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், சொக்கலிங்கம் (வயது 56) என்பவர் இவற்றிற்கு பூட்டு போட்டிருப்பது உறுதியாகியுள்ளது.
விசாரணையில், சொக்கலிங்கத்தின் தந்தை, அரசு பள்ளிக்கு விளையாட்டு மைதானமாக பயன்படுத்தப்படுகின்ற நிலத்தில் ஒரு பகுதியை தானமாக வழங்கியிருந்தார். ஆனால், அந்த நிலம் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்படாமல் கடந்த 80 ஆண்டுகளாக வாய்மொழி அடிப்படையில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.
மேலும், அந்த மைதானத்துக்கு அருகே சொக்கலிங்கத்திற்கு சொந்தமான 2.5 ஏக்கர் நிலம் உள்ளது. அந்த நிலத்திற்கு செல்லும் பாதை, கடந்த 15 ஆண்டுகளாக மற்றொரு நபரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், அதனைப்பற்றி முறையாக அதிகாரிகளிடம் புகார் அளித்தும் தீர்வு கிடைக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
“அரசு பள்ளிக்கு எங்கள் குடும்பம் நிலம் தானமாக வழங்கியுள்ளோம். ஆனால், என் சொத்து சம்பந்தமான பிரச்சனைக்கு அதிகாரிகள் எந்த தீர்வும் வழங்கவில்லை. எனவே தானமாக கொடுத்த நிலத்தில் உள்ள வாசலை நான் பூட்டி உள்ளேன் ” என சொக்கலிங்கம் விளக்கம் அளித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனையை சமாதானப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.