தமிழக வெற்றிக் கழகத் தலைவர் மற்றும் நடிகர் விஜய், தனது அரசியல் பயணத்தை “உங்கள் விஜய் நா வரேன்” என்ற முழக்கத்துடன் நாளை (செப்டம்பர் 13) திருச்சியில் தொடங்குகிறார்.
இதுகுறித்து சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட அறிக்கையில், “என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு வணக்கம்! பொய்யான வாக்குறுதிகள் மூலம் மக்களை ஏமாற்றும் திமுக அரசின் மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர். மக்களின் மனசாட்சியை மதித்து, உண்மையான மக்களாட்சியை அமைப்பதே நமது நோக்கம். ‘வாகை சூடும் வரலாறு திரும்புகிறது, உங்கள் விஜய் நா வரேன்’ என்ற நமது பயணம் தமிழகம் முழுவதும் நடைபெறும் மக்கள் சந்திப்பு பயணமாகும்,” என தெரிவித்துள்ளார்.
அவர் மேலும், “என் கொள்கைத் தலைவர்கள் தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர், அண்ணல் அம்பேத்கர், வீரமங்கை வேலுநாச்சியார், மக்கள் சேவலர் அஞ்சலை அம்மாள் ஆகியோரின் வழியில், மக்கள் மத்தியில் நேரடியாக சென்று சந்திப்பதே என் கடமை. எந்த அரசியல் தலைவருக்கும் விதிக்கப்படாத அளவுக்கு நமது கழகத்தின் மக்கள் சந்திப்புகளுக்கு காவல்துறை அதிகமான நிபந்தனைகளை விதித்துள்ளது. இருந்தாலும், அந்த வழிமுறைகளை பின்பற்றி நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற மாவட்ட பொறுப்பாளர்கள், பாதுகாவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்,” எனவும் குறிப்பிட்டுள்ளார்.
சுற்றுப்பயண அட்டவணை
செப்டம்பர் 13 – திருச்சி, பெரம்பலூர், அரியலூர்
செப்டம்பர் 20 – நாகை, திருவாரூர், மயிலாடுதுறை
அக்டோபர் 4 & 5 – கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு
அக்டோபர் 11 – குமரி, நெல்லை, தூத்துக்குடி, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை
அக்டோபர் 25 – தென் சென்னை, செங்கல்பட்டு
நவம்பர் 1 – கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர்
நவம்பர் 8 – திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம்
நவம்பர் 15 – தென்காசி, விருதுநகர்
நவம்பர் 22 – கடலூர்
நவம்பர் 29 – சிவகங்கை, ராமநாதபுரம்
டிசம்பர் 6 – தஞ்சை, புதுக்கோட்டை
டிசம்பர் 13 – சேலம், நாமக்கல், கரூர்
டிசம்பர் 20 – திண்டுக்கல், தேனி, மதுரை
விஜய் தனது பயணத்தின் மூலம் மக்களிடம் நேரடியாக சென்று, அவர்களது பிரச்சினைகளை கேட்டு, “மனசாட்சியுள்ள மக்களாட்சியை” உருவாக்கும் நோக்கத்துடன் களமிறங்குவதாகத் தெரிவித்துள்ளார்.