வரும் சட்ட மன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓய்வூதியம் கொடுத்து வீட்டில் அமர வைக்கப் போவதாகவும், பாஜக அதிமுக கூட்டணி என்பது கோழி இறக்கையும், மண்ணாங்கட்டி போல என்றும், காற்றடித்து மழை பெய்தால் கோழி இறக்கை பறந்தும் மண்ணாங்கட்டி கரைந்தும் போய்விடும் என்றும் இந்த சட்ட மன்ற தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி டெபாசிட் இழக்கும் என திருவள்ளூரில் நடைபெற்ற திமுகவின் கொள்கை விளக்க பொது கூட்டத்தில் திமுகவின் கொள்கை பரப்பு செயலாளர் திண்டுக்கல் லியோனி இவ்வாறு தெரிவித்தார்.
திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி சாலையில் மேற்கு மாவட்ட திமுக சார்பில் திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் மாவட்ட செயலாளரும் திருத்தணி சட்டமன்ற உறுப்பினருமான சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர், திமுகவின் கொள்கை பரப்பு செயலாளர் திண்டுக்கல் லியோனி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். அப்பொழுது பேசிய லியோனி திருவள்ளூரில் எடப்பாடி பழனிச்சாமி பரப்புரையில் தமது கட்சி நிர்வாகி மயக்கம் போட்டு விழும் வகையிலும், பொய் சொல்லிட்டு சென்று இருப்பதாகவும், வரும் சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓய்வூதியம் கொடுத்து வீட்டில் அமர வைக்கப் போவதாகவும் அவர் தெரிவித்தார். அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் ஒன்றிய அரக்கு நிகராக ஊதியம் கொடுத்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி எனவும், அதிமுக ஆட்சியில் போராட்டத்தில் ஈடுபட்ட 5, ஆயிரம் ஆசிரியர்கள் மீது வழக்கு போட்டு வீட்டிற்கு அனுப்பி வைத்தவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா என தெரிவித்தார். மேலும் செல்லூர் ராஜு, தமிழ்நாடு முதல்வர் மீண்டும் முதல்வராக வேண்டுமென சொல்லி இருப்பதால் எடப்பாடி பழனிச்சாமி தலையில் அடித்துக் கொள்வதாகவும், அதிமுகவை சேர்ந்த செல்லூர்ராஜு, திண்டுக்கல் சீனிவாசன் போன்றவர்கள் சிறப்பாக ஆட்சி செய்யும் முதல்வர் மீண்டும் முதலமைச்சராக வேண்டுமென கூறி வருவதாகவும் அவர் தெரிவித்தார். பாஜக-அதிமுக கூட்டணி என்பது கோழி இறக்கையும் மண்ணாங்கட்டி போல என்றும் காற்றடித்து மழை பெய்தால் கோழி இறக்கை பறந்தும் மண்ணாங்கட்டி கரைந்தும் போய் விடும் என்றும், வரும் 2026 சட்ட மன்ற தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி டெபாசிட் இழக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.100 நாள் வேலை திட்டத்தில் மகாத்மா காந்தி பெயரை எடுத்து விட்டு வாயில் நுழையாத பெயரை வைத்திருப்பதாகவும், இதன் மூலம் காந்தி தியாகத்தை அவர்கள் மறைத்திருப்பதாகவும், 100 நாள் வேலை பெயர் மாற்றம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் எடப்பாடி பழனிச்சாமி பாஜகவுக்கு ஜால்ரா போட்டு வருவதாகவும், அமித்ஷா சொல்வதை கேட்கும் அடிமை எடப்பாடி பழனிச்சாமியாக அவர் இருப்பதாகவும் விமர்சித்தார். புரட்சித் தமிழன் பட்டத்துக்கு சொந்தக்கார்ரான நடிகர் சத்யராஜ் பட்டத்தை எடப்பாடி பழனிச்சாமி பயன்படுத்துவது வெட்கம் இல்லையா என சாடிய அவர்,எடப்பாடி பழனிச்சாமி கலாய்த்து மேடையில் நையாண்டி செய்து பாடல் பாடி அவரை விமர்சித்தார். 25 ஆண்டுகளாக ஓய்வூதியம் அளிக்கக்கோரி ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் நடத்திய போராட்டத்தின் விளைவாக அவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பால் வார்த்துள்ளதாகவும்,விலக்கு அளிக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கும் கூட கருணை ஓய்வூதியம் அளித்து மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாகவும், பிறந்த குழந்தை முதல் முதியவர் வரை அனைவருக்கும் எல்லாருக்கும் எல்லாம் என திட்டங்களை முதல்வர் வழங்கி வருவதாகவும், எதிர்கட்சிகள் விமர்சனத்திற்கு அனைத்திற்கும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு ஓய்வூதியம் அளித்து முதல்வர் முடிவுக்கு கொண்டு வந்துள்ளதாக அவர் தெரிவித்தார். வரும் 9-ஆம் தேதி 10 லட்சம் மாணவர்களுக்கு AI தொழில்நுட்பம் கூடிய லேப்டாப்பை முதல்வர் வழங்க உள்ளதாகவும், முதல்வர் எல்லோருக்கும் எல்லாம் என நினைத்து ஆட்சி செய்து வருவதாகவும், லயோலா கல்லுரி மாணவர்கள் கருத்து கணிப்பு போல மீண்டும் முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பு ஏற்பார் அதில் எந்த மாறுதலும் கிடையாது எனவும், அவரை எதிர்த்திருந்த ஒரு சில விஷயங்களை கூட முதல்வர் தவிடு பொடியாக்கி இருப்பதாகவும், எடப்பாடி பழனிச்சாமியின் பாஜக கூட்டணி மண்ணை கவ்வப்போவது உறுதி எனவும், புதிதாக அரசியல் கட்சி தொடங்கியுள்ள நபர்கள் எந்த வழியில் செல்கிறார்கள் என்பது அவர்களுக்கே தெரியவில்லை எனவும், திமுகவின் தேர்தல் பணிக்கு முன்பாக அவர்களெல்லாம் எங்கே செல்வார்கள் என்று தெரியாது எனவும், கூட்டத்தை காட்டி விஜய் நடத்துகின்ற அரசியல் திமுகவின் திட்டமிட்ட அரசியல் முன்பு எடுபடாது எனவும் பேசினார்.

















