பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சி மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ள நிலையில், கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகள் ரோகிணி ஆச்சார்யா அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
243 தொகுதிகள் கொண்ட பீகாரில் நவம்பர் 6 மற்றும் 11 ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற்றது. நேற்று (நவம்பர் 14) நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) 202 இடங்களை கைப்பற்றி ஆட்சியைத் தொடரும் நிலையை பெற்றுள்ளது. பாஜக-ஜிடியூ கூட்டணி பெரும்பான்மை பெற்ற நிலையில், மகாகத்பந்தன் கூட்டணிக்கு வெறும் 31 இடங்களே கிடைத்தது. இதில் ஆர்ஜேடி 25 இடங்களையே வென்றது.
இந்தத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, ரோகிணி ஆச்சார்யா தனது எக்ஸ் பக்கத்தில், “நான் அரசியலை விட்டு விலகுகிறேன். என் குடும்பத்திலிருந்தும் விலகுகிறேன். சஞ்சய் யாதவ் மற்றும் ரமீஸ் கேட்டதற்காகவே இந்த முடிவை எடுத்துள்ளேன். எல்லா பழிகளையும் நான் ஏற்றுக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார். இந்த முடிவு, அவரது கணவர் ரமீஸ் ஆலம் மற்றும் சஞ்சய் யாதவின் ஆலோசனையின் பேரில் எடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
லாலு–ராப்ரி தம்பதியருக்கு மொத்தம் ஒன்பது குழந்தைகள் உள்ளனர், அதில் நான்கு பேர் அரசியலில் செயற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில், லாலுவின் மகனான தேஜ் பிரதாப் யாதவ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதோடு, இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு தோல்வியடைந்திருந்தார்.
பீகார் அரசியலில் யாதவ் குடும்பம் பெரிய தாக்கம் செலுத்தும் நேரத்தில், ரோகிணியின் விலகல் புதிய பரபரப்பை உருவாக்கியுள்ளது.

















