திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த சில தினங்களாக நிலவி வரும் சீரற்ற வானிலை, மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதித்து வருகிறது. குறிப்பாக, காற்றுடன் கூடிய மிதமான மற்றும் கனமழை இடைவெளி விட்டுப் பெய்து வருவதோடு, அடர்ந்த பனி மூட்டமும் நிலவுவதால், மலைச்சாலையில் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்தச் சூழலில், கொடைக்கானல் கீழ்மலைப் பகுதிகளான தாண்டிக்குடி, பண்ணைக்காடு, பாச்சலூர், தடியன் குடிசை உட்படப் பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்குப் பிரதான இணைப்பாக விளங்கும் பாச்சலூர் – ஒட்டன்சத்திரம் மலைச்சாலையில் இன்று காலை வேளையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கீழ்மலைக் கிராமங்களில் பலத்த காற்றுடன் பெய்த மழையின் காரணமாக, பாச்சலூர் புலிக்குத்தி காடு அருகே பிரம்மாண்டமான ராட்சத மரம் ஒன்று திடீரென முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது.
இந்த விபத்தால், கொடைக்கானல் கீழ்மலைக் கிராமங்களில் இருந்து ஒட்டன்சத்திரம் நோக்கி அத்தியாவசியப் பணிகளுக்காகச் சென்ற வாகனங்களும், அங்கிருந்து மலைப் பகுதிக்குச் சென்ற வாகனங்களும் சாலையின் இருபுறமும் அணிவகுத்து நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து முழுமையாகத் துண்டிக்கப்பட்டது. குறிப்பாக, அன்றாட வேலைகளுக்குச் செல்ல வேண்டிய பொதுமக்களும், மலைப் பகுதியில் விளைந்த காய்கறிகளை ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டிற்குக் கொண்டு செல்ல வந்த சரக்கு வாகனங்களும் உரிய நேரத்தில் செல்ல முடியாமல் பெரும் அவதியடைந்தனர். சரக்கு வாகனங்களில் கொண்டுவரப்பட்ட காய்கறிகள் தேக்கமடைந்ததால், அவற்றின் தரம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டது.
மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்ட தகவல், சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டும், உரிய நேரத்தில் வனத்துறை அல்லது நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் யாரும் சம்பவ இடத்திற்கு வந்து போக்குவரத்தைச் சீர் செய்ய முன்வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த அப்பகுதி பொதுமக்கள், வேறு வழியின்றித் தங்களது சொந்த முயற்சியில், ஒரு ஜேசிபி வாகனத்தை வரவழைத்து, முறிந்த மரத்தை வெட்டி அகற்றும் பணியைத் தொடங்கினர். சுமார் ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, மரத்தின் பெரிய பகுதிகள் அகற்றப்பட்டு, போக்குவரத்து மீண்டும் சீர் செய்யப்பட்டது. பொதுமக்களின் இந்தத் துரித நடவடிக்கையால் ஒட்டன்சத்திரம் பிரதான மலைச்சாலையில் சிறிது நேரம் பரபரப்புடன் காணப்பட்டது.
இதே பிரதான மலைச்சாலையில் கடந்த வாரத்தில், ஓடும் வாகனத்தின் மீது மரம் முறிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்த துயர சம்பவம் நிகழ்ந்ததும் குறிப்பிடத்தக்கது. இத்தகைய தொடர் விபத்துகள் நடந்தபோதும், சாலையின் ஓரத்தில் ஆபத்தான நிலையில் சாய்ந்து நிற்கும் மற்ற மரங்களை அகற்ற வனத்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அரசு அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு வலுப்பெற்றுள்ளது. மலைவாழ் கிராம மக்களின் அத்தியாவசியத் தேவைகளுக்காக உள்ள இந்த ஒட்டன்சத்திரம் பிரதான மலைச்சாலையில், விபரீதம் நிகழ்வதற்கு முன், துறை சார்ந்த அரசு அதிகாரிகள் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு, ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை உடனடியாக அகற்றி, பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை மக்கள் மத்தியில் வலுவாக எழுந்துள்ளது.


















