உப்புக் குடிநீரால் சிறுநீரகப் பாதிப்பு அடிப்படை வசதிகளின்றி தவிக்கும் சிலமலை ஊராட்சி மக்கள்!

தேனி மாவட்டம் போடி ஒன்றியம், சிலமலை ஊராட்சிக்கு உட்பட்ட கிழக்கு காலனி, புதுக்காலனி மற்றும் நடுக்காலனி பகுதிகளில் அடிப்படை வசதிகள் முற்றிலும் முடங்கியுள்ளதால், அங்கு வசிக்கும் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அன்றாட வாழ்க்கையை நகர்த்தவே பெரும் போராட்டத்தை எதிர்கொண்டு வருகின்றனர். இப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு மிக அருகிலேயே பாதுகாப்பற்ற முறையில் திறந்தவெளி கிணறு ஒன்று மூடப்படாமல் இருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கிணற்றில் அடிக்கடி ஆடு, மாடுகள் தவறி விழுந்து உயிரிழப்பதும், தற்போது குப்பைகள் மற்றும் தேங்கிய மழைநீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதும் வேதனையளிப்பதாக உள்ளது. குழந்தைகள் நடமாடும் அங்கன்வாடி அருகே உள்ள இந்த ‘மரணக் கிணற்றை’ மூட ஊராட்சியில் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இப்பகுதியின் குடிநீர் பிரச்சனை மிக மோசமான நிலையை எட்டியுள்ளது. சிலமலைக்கு உப்புக்கோட்டை கூட்டுக்குடிநீர் திட்டம் இருந்தாலும், காலனி பகுதிகளுக்குச் சூலப்புரம் போர்வெல் நீரையே விநியோகித்து வருகின்றனர். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த உவர்ப்புத் தன்மையுள்ள நீரைப் பருகுவதால், அப்பகுதி மக்கள் பலருக்குச் சிறுநீரகக் கல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நீரை எவ்வளவுதான் காய்ச்சிக் குடித்தாலும் பாத்திரங்களில் உப்புத் தாதுக்கள் படிந்து காணப்படுவதாகக் கூறும் பொதுமக்கள், தரமான குடிநீர் கிடைக்காமல் தினசரி இருசக்கர வாகனங்களிலும், பல கிலோமீட்டர் நடந்தும் தண்ணீர் பிடித்து வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

சுகாதாரத்துறையின் மெத்தனப் போக்கிற்குச் சான்றாக, பெண்கள் பயன்பாட்டிற்காகக் கட்டப்பட்ட சுகாதார வளாகம் கட்டி முடிக்கப்பட்டு 2 ஆண்டுகள் கடந்தும் இன்னும் பயன்பாட்டிற்குத் திறக்கப்படவில்லை. இதனால் வேறு வழியின்றி பெண்கள் சாலையோரங்களைத் திறந்தவெளி கழிப்பிடமாகப் பயன்படுத்தும் அவல நிலை நீடிக்கிறது. மேலும், முறையான தெருவிளக்கு வசதி இல்லாததால் இரவு நேரங்களில் பெண்கள் வெளியே செல்ல அச்சப்படுகின்றனர். சாக்கடைகள் தூர்வாரப்படாததால் கழிவுநீர் தேங்கி வீடுகளுக்குள் புழுக்கள் புகுவதும், சேதமடைந்த தரைப்பாலத்தால் விபத்துகள் ஏற்படுவதும் தொடர்கதையாகி வருகிறது. எனவே, அசம்பாவிதங்கள் ஏதும் நடக்கும் முன், போடி ஒன்றிய நிர்வாகம் தலையிட்டு திறந்தவெளி கிணற்றை மூடவும், அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் அப்பகுதி மக்கள் அவசரக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version