கரூர்:
கரூர் மாவட்டத்தில் தவெக தலைவர் விஜய் தலைமையில் நடந்த பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த், இணைப் பொதுச் செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் மற்றும் கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் உள்ளிட்டோருக்கு எதிராக போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் மதியழகன் மற்றும் நகரச் செயலாளர் பவுன்ராஜ் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் நீதிமன்றக் காவலில் உள்ளனர்.
இதனிடையே, ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் தலைமறைவாக உள்ள நிலையில், அவர்களை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில், கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தின் போது ஆம்புலன்ஸ் ஓட்டுநரை தாக்கியதாக குற்றம்சாட்டப்பட்ட தவெக உறுப்பினர் மணிகண்டன், முன் ஜாமீன் கோரி இன்று கரூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
இந்த வழக்கில் நீதிமன்றம் விசாரணை நடத்தி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

















