கரூர்:
கரூர் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில், 10 குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்த துயரச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்தச் சம்பவம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் முன்னதாக ஒரு சிறப்பு விசாரணைக் குழுவை (SIT) அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டது. இதனை எதிர்த்து, துயரச்சம்பவத்தில் உண்மையான காரணங்களை வெளிச்சம் போட சிபிஐ விசாரணை தேவை என தவெக தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்நிலையில், இன்று அந்த மனுவுக்கு தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், கரூர் சம்பவத்தை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. மேலும், விசாரணை நடைபெறும் விதத்தை கண்காணிக்க ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையிலான மூன்று பேர் கொண்ட புலனாய்வுக் குழுவை அமைக்க உத்தரவிட்டுள்ளது.
இந்தக் குழுவுக்கு ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமை தாங்குவார். அவருடன் இரு மூத்த ஐ.பி.எஸ். அதிகாரிகள் உறுப்பினர்களாக இடம்பெறவுள்ளனர்.
மேலும், மதுரை நீதிமன்ற வரம்புக்குள் வருவதாக இருந்த கரூர் சம்பவத்தை சென்னை உயர்நீதிமன்ற முதன்மை அமர்வு எவ்வாறு தன்னிச்சையாக விசாரித்தது என்று கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம், அதற்கான உத்தரவுகளை கடுமையாக விமர்சித்தது.
அரசு ஏற்கனவே விசாரணை ஆணையத்தை அமைத்திருந்த நிலையில், அதனை மீறி உயர்நீதிமன்றம் தனியாக SIT அமைத்தது சட்ட ரீதியில் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.